திமுகவின் கோட்டையான சென்னை மாநகராட்சியின் 134-வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் சென்னை மாநகராட்சியில் 5 வார்டுகளில் அதிமுகவையும் ஓரங்கட்டி, பாஜக இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது.
சென்னையில் ஒரு வார்டில் வெற்றி பெற்றதோடு, 5 வார்டுகளில் பாஜக இரண்டாமிடத்தைப் பிடித்துக் காட்டியிருப்பதன் மூலம் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ - என்று தமிழக பாஜக தலைவர்கள் முழங்குவதும், இது பெரியார் மண், தாமரை மலரவே முடியாது, கால் பதிக்க முடியாது என்றும் பாஜக எதிர்ப்பாளர்கள் கூறுவதும் வாடிக்கையான ஒன்று. கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அது அதிமுகவோடு அமைந்த கூட்டணியால் கிடைத்தவை என்று பாஜக எதிர்ப்பாளர்கள் அதற்குப் பதில் சொல்லி வந்தனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி என்று அறிவித்தது முதலே, இந்தத் தேர்தலில் பாஜகவின் பலம் என்னவென்று தெரிய வரும் என்று பலரும் பேசி வந்தார்கள். அதன்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் பாஜக ஓரளவுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று வருகிறது.

அதிமுகவுக்கு அடுத்தப்படியாக மாநகராட்சி வார்டுகளில் 7 இடங்களில் பாஜக வென்று காட்டியிருக்கிறது. குறிப்பாக திமுகவின் கோட்டையான சென்னை மாநகராட்சியின் 134-வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் சென்னை மாநகராட்சியில் 5 வார்டுகளில் அதிமுகவையும் ஓரங்கட்டி, பாஜக இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது. மேலும் தென் சென்னை பகுதிகளில் பாஜக குறிப்பிடும்படியான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதேபோல நகராட்சி, பேரூராட்சிகளில் 280 வார்டுகளில் பாஜக வென்று காட்டியிருக்கிறது. இதையெல்லாம் குறிப்பிட்டு பாஜகவினர் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

சென்னை மாநகராட்சியில் குறிப்பிடும் அளவுக்கு பாஜக முன்னேறியிருக்கிறது என்று தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றோரும் பேசி வருகிறார்கள். ‘1967-ஆம் ஆண்டில் திமுக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பிருந்தே சென்னை மாநகரம் திமுகவின் கோட்டை. ஆனால், வந்தேறி கட்சி, வட இந்திய கட்சி, முன்னேறிய வகுப்பினருக்கான கட்சி என்றெல்லாம் பாஜகவை திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் பேசி வரும் நிலையில், தனித்து போட்டியிட்டு பாஜக வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டியிருப்பதாக’ பாஜக ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை கட்சி சின்னத்தில் போட்டியிட்டாலும், கட்சி அபிப்ராயங்களைத் தாண்டி தனிப்பட்ட வேட்பாளருக்காக மக்கள் வாக்களிப்பதும் உண்டு. அந்த வகையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி தோல்வியை அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாமலும் போவதுண்டு.

ஆனால், தேர்தலுக்கு முன்பு சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தபோது, ‘சென்னையை எங்களின் கோட்டை என்று திமுகவினர் சொல்கிறார்கள். சென்னையில் பாஜக ஓட்டையைப் போடத் தொடங்கிவிட்டது” என்று கூறியிருந்தார். அண்ணாமலை சொன்னது நடக்கத் தொடங்கிவிட்டதா என்பதை அறிய அடுத்தடுத்த தேர்தல்கள் வரை காத்திருக்க வேண்டும்.
