DMK Troll Tamil Nadu Communist Party
இரண்டு கம்யூனிஸ்டுட் கட்சிகளுக்கும் தமிழக சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இருந்து ஒட்டு மொத்தமாக மண்ணை கவ்வியதன் விளைவு இது!
தேர்தல் படு தோல்விக்குப் பின் ம.ந.கூட்டணி அதை உருவாக்கியவர்களாலேயே உடைத்து உருத்தெரியாமல் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில் ஆளாளுக்கு தனி ஆவர்த்தனம்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்து வரும் தேர்தல்களுக்கு தொற்றிக் கொள்ள இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் ஒரு குதிரை தேவை.
ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க. சிதைந்து கிடப்பது மட்டுமில்லாமல், அது பா.ஜ.க.வின் பிடியில் இருப்பதால் கம்யூனிஸ்டுகளால் அங்கே செல்ல முடியாது. ஆக ஒரே சாய்ஸ் தி.மு.க.தான். ‘வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான இயக்கம்’ எனும் பெயரில் தி.மு.க.வுடன் ஒட்டிக் கொள்ள அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே முரசொலி பவளவிழா மேடையில் ஸ்டாலினோடு கைகோர்த்தும், கருணாநிதியை கோபாலபுரமே சென்று சந்தித்தும் கம்யூனிஸ்டுகள் தங்கள் நெருக்கத்தை ஸ்டாலினோடு இறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

அதிலும் இந்திய கம்யூனிஸ்ட் ஒரு படி மேலே போய், கோயமுத்தூரில் கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் “இந்திரா காந்தியை பார்த்து கருணாநிதி ‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்று அழைத்தது போல் கலைஞரின் மகனே வருக! நிலையான ஆட்சி தருக! என்று தளபதி ஸ்டாலினை பார்த்து தமிழக அழைக்கிறது.
பாசிச சக்திகளுக்கு எதிரான ஒரு கூட்டணியை அமையுங்கள் எங்களின் ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு.” என்று கூறி கூட்டணியில் தங்களுக்கென ஒரு துண்டை நச்சென போட்டுவிட்டார் தா.பாண்டியன். இந்நிலையில் ஆக ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தி.மு.க. போட்டியிடும் நிலையில் அதன் வேட்பாளரை சி.பி.ஐ. ஆதரிக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
ஆனால் எப்போதுமே கொஞ்சம் பண்ணையார் குணத்தோடு நடந்து கொள்ளும் சி.பி.எம். இதுவரையில் தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இடம் வேண்டும் என்று வெளிப்படையாய் கேட்கவில்லை. அதேநேரத்தில் தி.மு.க.வை விட்டு வேறிடம் போகவும் வாய்ப்பில்லை.
சி.பி.ஐ. எங்கிருக்கிறதோ அங்கேதான் சி.பி.எம். இருக்கும் என்பது நெடுங்கால நியதி.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன? என்று கேட்டதற்கு “அது பற்றி 30-ம் தேதி கோயமுத்தூரில் நடக்க இருக்கும் மாநில குழு கூட்டத்தில் சொல்கிறோம்.” என்று கூறியிருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன் சற்றே கெத்தாக.
ஹும்! அநேகமாக தங்களின் வேட்பாளரை ஆதரிப்பதாகத்தான் தீர்மானம் போடுவார்கள், அதற்கு இவ்வளவு பிகு பண்ணிக்கணுமா? என்று சற்றே நக்கலாய் சிரிக்கிறது தி.மு.க.
