வரும் மக்களவை தேர்தலில் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகிறது திமுக. எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டுமே கூட்டணிக்கு அழைத்துக் கொண்டு களமிறங்குகிறார் டி.டி.வி.தினகரன். கடந்த காலகட்டங்களில் சிறுபான்மையினரின் வாக்குகளை கொத்தாக அள்ளி வந்தது திமுக. 

கடந்த முறை ஜெயலலிதா மோடி எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்ததால் சிறுபான்மையினரின் வாக்குகளையும் அறுவடை செய்து 37 இடங்களை வென்றார். ஆனால், இந்த முறை பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்க வாய்பே இல்லை. 

இந்த வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் எனக் கணக்குப்போட்டிருந்த திமுகவுக்கு இப்போது கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் டி.டி.வி.தினகரன். புது ரூட்டை பிடித்து சிறுபான்மை மக்களின் வாக்குகளை தன் வசப்படுத்தி வருகிறார் அவர். திமுகவில் சீட்டு கேட்டு கிடைக்காத மனித நேய மக்கள் கட்சியினரும் தற்போது தினகரன் பக்கம் ஒதுங்கலாமா? என்கிற முடிவில் இருக்கிறது. ஏற்கெனவே எஸ்.டி.பி.ஐ.கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது அமமுக. இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.

நம்மை விட்டு சிறுபான்மையினரின் வாக்குகள் எங்கும் போய்விடாது என கணக்குப்போட்டு வந்த திமுக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியாக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் கலக்கத்தில் இருக்கிறது. இன்னும் சில அமைப்புகள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.