திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் நாளை மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது, சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநரிடம் வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.

தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடன் நாளை மாலை 5.00 மணியளவில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்குப் பிறகு, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரைச் சந்தித்து ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர்.

திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பது குறித்து கோரியிருந்தார்.

இந்த நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க அனுமதி கோரியிருந்தனர். இந்த சந்திப்பது குறித்து ஆளுநரிடம் திமுக தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்ததை அடுத்து, நாளை மாலை 5 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், இந்தியயூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் நாளை மாலை ஆளுநரை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.