சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அமைச்சர்களின் தொகுதிகளில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இந்தக் கூட்டங்களுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் பழனிச்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில், “மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் கொரனோ தடுப்பு விதிகளை மீறியும், தனி மனித விலகலை முறையாக பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் நடத்தபடுகின்றன. போலீஸாரிடம் முறையான அனுமதி பெறாமலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகே இக்கூட்டங்கள் நடத்தபடுகின்றன. இக்கூட்டங்களில் மற்ற கட்சிகள் குறித்து பொதுமக்களிடம் தவறான கருத்துக்கள் பரப்படுகின்றன.  கோவையில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண் தாக்கபட்டார்.

 
தியேட்டர்களில் இருக்கைகளுக்கு 50 சதவீதம் மட்டுமே உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந் நிலையில் திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.