தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியர்கள் போராடும் அவல நிலை உருவாகி வருவதாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தியது.

தங்களின் கொரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியர்கள் போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பு நடத்தும் அறவழி போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தால் அனைவரின் நலன் காக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.