திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றுகொண்டிருக்கிறது. எப்போதும் ஒரே கட்டமாகப் பேச்சுவார்த்தை முடிந்துவிடாது. உள்துறை அமைச்சரே வந்து நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தி, அதிமுகவில் முடிவு காண முடியவில்லை. அங்கேயே முடிவு எட்டப்படவில்லை. எங்களிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?
கருணாநிதி காலத்திலும் இதேபோன்றுதான் பலகட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. எப்படி எடுத்தவுடன் கேட்பதைக் கொடுக்க முடியும். பேசிப்பேசித்தான் கொடுக்க முடியும். ஒரு கட்சி புதிய சின்னத்தை வாங்கி அதை மக்களிடம் கொண்டு சென்று விளம்பரப்படுத்துவதைவிட உதயசூரியன் அறிமுகமான ஒரு சின்னம். அதில் நிற்க கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன. நாங்களும் சின்னத்தை கொடுக்க விரும்புகிறோம். கம்யூனிஸ்ட் கட்சியிடமும், காங்கிரஸ் கட்சியிடமும் பெரியண்ணன் தோரணையில் அணுக முடியும் என்று நினைக்கிறீர்களா? சுமுகமாகப் பேசினால்தான் எதையும் முடிக்க முடியும்.
ஜெயலலிதா பற்றி எதுவும் சொல்லக்கூடாது. என்றாலும், அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போதே அதிமுக போட்டியிடும் தொகுதியை அறிவித்தவர். மீதித் தொகுதிக்குப் பேச வாங்க என்றார் ஜெயலலிதா. நாங்கள் அதுபோல நடந்துகொள்கிறோமா? திரும்பத் திரும்ப அழைத்துப் பேசுகிறோம். நாங்கள் எப்படி பெரியண்ணன் மாதிரி நடக்க முடியும். எல்லோரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றுதான் சீட்டு கேட்டு பணம் கட்டுவார்கள். உதயநிதியும் அப்படித்தான். அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அதில் உண்மையில்லை.” என்று கே.என். நேரு தெரிவித்தார்.