பாஜக கூட்டணியை அதிமுகவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதிமுகவுடான கூட்டணியை ஏன் விரும்புகிறோம் என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விளக்கியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க மக்களவை சபாநாயகர் தம்பிதுரை எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதேபோல பொன்னையன், அன்வர் ராஜா போன்ற அதிமுக மூத்தத் தலைவர்களும் பாஜக கூட்டணியை எதிர்க்கிறார்கள். ஆனாலும், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான திரைமறைவு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 

இந்நிலையில் பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுகவில் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அந்தக் கூட்டணியை ஏன் பாஜக விரும்புகிறது என்பது பற்றி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய செளந்திரராஜன் தெரிவித்தார். “தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டும். அதுதான் எங்களுடைய ஒரே நோக்கம். இந்தக் கட்சிகளைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறோம்.

 

திமுக-காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்க வெற்றிகரமான கூட்டணியை உருவாக்க பாஜக விரும்புகிறது. தற்போதைய சூழலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான வாக்குகள் சிதறக் கூடாது. அதனால்தான் கூட்டணிக்கு விரும்புகிறோம். பிரிந்து போட்டியிடுவதால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகப் போய்விடக்கூடாது. இதுபோன்ற அம்சங்களும் கூட்டணி ஏற்படுத்த நாங்கள் விரும்புவது காரணம்” என்று தமிழிசை தெரிவித்தார்.