செந்திலாண்டவனான முருகக்கடவுள் தந்தைக்கு பாடம் சொன்னாரா இல்லையா என தெரியாது. ஆனால், செந்தில்பாலாஜி எனும் இளம் அரசியல்வாதி தனது அப்பாவை விட மூத்த அரசியல் தலைவர்களுக்கெல்லாம் பாலிடிக்ஸின் பலே பாலபாடத்தை நடத்திக் கொண்டிருப்பதுதான் மேஜிக்கே. இவரது அதிரடி தாங்க முடியாமல் அரவக்குறிச்சியில் அலறுகிறது அ.தி.மு.க. 

இதுதான் மேட்டரே.... தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் முறைத்துக் கொண்டு நின்றாலும் கூட ஒரேயொரு தொகுதியில் மட்டும் உள்ளுக்குள் கைகோர்த்து வேலை பார்க்கிறது. அது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில்தான். காரணம், இங்கே தங்கள் இருவருக்குமான பொது எதிரி செந்தில்பாலாஜி, தி.மு.க. சார்பாக களமிறங்கி இருப்பதுதான். செந்தில்பாலாஜியை தோற்கடிக்க, அரவக்குறிச்சி தொகுதியினுள், ஒரு எம்.எல்.ஏ.வாக அவர் கண்டுகொள்ளாமல் விட்ட மக்கள் கோரிக்கைகளை எல்லாம் பார்த்து பார்த்து நிறைவேற்றி, மாஸாக வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

அதேவேளையில் தொகுதியிலிருக்கும் மிக கணிசமான இஸ்லாமிய வாக்குவங்கிகளை வளைக்க, ஒரு முஸ்லிமை வேட்பாளராக்கிவிட்டார் தினகரன். ஆக இரு தரப்பும் சேர்ந்து கொண்டு அறிவிக்கப்படாத கூட்டணியை அமைத்து செ.பா.வுக்கு எதிராக செயல்படுகிறார்கள். விடுவாரா செந்தில்பாலாஜி? இறக்கினார் தன் அதிரடி சரவெடியை. அதன்படி “எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தால், வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் ஏழை மக்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு 3 சென்ட் நிலத்தை, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இலவசமாக வழங்குவேன். இது சாத்தியமாகாத திட்டம் என சிலர் கூறுகின்றனர். நிச்சயம் சாத்தியமாகும். 

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகள் 25 ஆயிரம் பேருக்கு என்னிடம் இருக்கும் நிலத்தை தருவேன். இல்லையென்றால் என் கைகாசு போட்டு வாங்கித் தருவேன். என்னை நம்புங்கள், எம்.எல்.ஏ.வாக்குங்கள்.” என்று மெகா ஆஃபரை அள்ளிவிட்டிருக்கிறார். நிலத்தின் விலைகள் இருக்கும் நிலையில், 3 சென்ட்  இலவசமாக கிடைப்பதென்பது சாதாரண விஷயமா? என்று ஆச்சரியப்பட்ட ஏழை மக்கள், சாதி, மத வித்தியாசமில்லாமல் செந்தில்பாலாஜியை நோக்கி திரும்ப துவங்கிவிட்டனர். நடுத்தர மக்களும் கூட தங்களுக்கும் கிடைத்துவிடாதா? எனும் நோக்கில் முட்டி மோதிக் கொண்டுள்ளனர்.

 

நிலம் கேட்டு செந்தில்பாலாஜின் அலுவலகத்தில் விண்ணப்பிப்பது, ஆதார் கார்டு கொடுப்பது என்று தூள் பறக்கிறது பிராசஸ். இந்த ‘3 சென்ட்’  வாக்குறுதி மூலமாக டோட்டல் அரவக்குறிச்சியும் தன்னை நோக்கி திரும்பியிருக்கும் சந்தோஷத்தில் செந்தில் குதிக்க, கடுப்பேறிப்போயுள்ளன ஆளுங்கட்சியும், அ.ம.மு.க.வும். அதிலும் “செந்தில்பாலாஜியின் ஸ்டேட்மெண்டுகளை தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும் கவனிக்க வேண்டும். 25 ஆயிரம் பேருக்கு தன்னிடம் இருக்கும் நிலத்தை தருவேன் என்கிறார். 

அப்படியானால அவரிடம் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறதா சொந்தமாக? அல்லது விலைக்கு வாங்குமளவுக்கு பணம் வைத்துள்ளாரா? இவ்வளவு நிலம் அல்லது அதன் மதிப்புக்கு இணையான பணம் அவரிடம் எப்படி வந்தது? உடனடியாக செந்தில்பாலாஜியின் சொத்துக்களில் ரெய்டு நடத்துங்கள், உரிய நடவடிக்கை எடுத்து அவர் இந்த தேர்தலில் போட்டியிடும் தகுதியை ரத்து செய்யுங்கள்.” என்று அலறியிருக்கிறது அ.தி.மு.க. இதை ஏற்கனவே எதிர்பார்த்த செந்தில்பாலாஜியோ ‘வரட்டும் வ.வ.துறை’ என்கிறார். இதுதான்டா  அரசியல்!