நாமெல்லாம் ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால், தனித்தனி தாய்களின் வயிற்றிலே பிறந்த உடன்பிறப்புகள் என்று சொன்னார் அண்ணா. ஆனால், ஒரே வயிற்றில் பிறந்தவர்களுக்கு மட்டுமே திமுக என மாற்றினார் கருணாநிதி. அடுத்து திமுக நிவாகிகளின் வாரிசுகளிக்கே திமுக என செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

நிர்வாகிகள் உயிருடன் இல்லாதபோதோ, அல்லது ஓய்சு பெற்ற பிறகோ அவர்களது வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குவது திமுக வழக்கம். ஆனால், இந்த கட்டுக்கோப்பில் இருந்து மெல்ல விலகி வருகிறது மு.க.ஸ்டாலின் காலத்து திமுக. 

2014ம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலின் போது, தற்போது போட்டியிடுபவர்கள் எதிர்காலத்தில் தனக்கோ மகனுக்கோ மக்களவை, சட்டசபை மற்றும் கட்சிப் பதவிகளில் இடம் கேட்கக் கூடாது என்ற உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட கருணாநிதி கட்டளையிட்டார். ஆனால் அப்போது சில மாவட்ட செயலாளர்கள் கையெழுத்துப் போட மறுத்து வந்தனர். அவர்களில் ஒருவர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி. அடுத்து தன் மகன் செந்தில் குமாருக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வாங்கிக் கொடுத்தார். அடுத்து வந்த தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு எம்.எல்.ஏ சீட் வாங்கி கொடுத்து வெற்றிபெற வைத்தார். 

இந்த நிலையில் திமுகவின் மாட்ட செயலாளர்களாக இருந்த பலரும் மாநில பொறுப்புகளுக்கு வந்த பிறகு தங்களது வாரிசுகளுக்கு மாவட்டச் செயலாளர், அல்லது சட்டமன்றத் தேர்தலில் சீட் என கோரிக்கை வைக்க தயாராகி விட்டனர். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சீட் கேட்க முடிவெடுத்துள்ளார். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் மகன் கம்பன் ஆகியோருக்கும் முக்கிய பொறுப்புகளை வழங்குமாறு மு.க.ஸ்டாலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


 
இதேபோல், கோவை மாவட்டத்துக்கு பொங்கலூர் பழனிச் சாமியின் மகன் பைந்தமிழ் பாரி, திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஆவுடையப்பன் மகன் பிரபாகரனுக்கும் சீட் கேட்க முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகன் டாக்டர் கவுதம சிகாமணியை தேர்தல் களத்துக்குக் கொண்டு வருவதாகச் செய்திகள் சிறகடிக்கின்றன. சிகாமணியை விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியிலேயே நிறுத்தலாம் என பொன்முடிக்கு சிலர் யோசனை சொன்னார்களாம். ஆனால், அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சீட் கேட்டால் நல்லாயிக்காது என யோசித்த பொன்முடி, மகனை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தயாராவதாகச் சொல்கிறார்கள். 

விழுப்புரம் நாடாளுமன்றம் ரிசர்வ் தொகுதி என்பதால் அதற்குப் பதிலாக, கள்ளக்குறிச்சி தொகுதியை மகனுக்காக தேர்வு செய்திருக்கிறாராம் பொன்முடி. இது தொடர்பாகத் தலைமையிடமும் பேசிமுடித்து, அவர்கள் சொன்ன பெரிய தொகை ஒன்றையும் அங்கே கட்டிவைத்துவிட்டதாகவும் விழுப்புரம் திமுக உடன்பிறப்புகள் பேசிக்கொள்கிறார்கள்.