“ஜெயலலிதா, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், பின்னர் எடப்பாடி பழனிசாமி என ஆளுக்கு ஏற்றவாறு பச்சோந்தியைவிட படு வேகமாக நிறம் மாறும் அமைச்சர் உதயகுமாருக்கு, எங்கள் கழகத் தலைவர் தளபதி பற்றிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஆளுக்கேற்றவாறு ஜால்ரா அடித்து அமைச்சர் பதவி பெற்றால் தகுதி வந்துவிடுமா?” என  திமுக துணைப் பொதுச் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் : -தமிழகத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அளித்த சான்றிதழை விமர்சனம் செய்த எங்கள் கழகத் தலைவர் அவர்களைப் பார்த்து “ஆத்திரத்தில் வெறுப்பை அள்ளிக் கொட்டுகிறார்” என அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை விட்டுள்ள அமைச்சர் திரு ஆர்.பி உதயகுமாருக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

“தரத்திற்கு” ஏற்ற “பதவியை” பெற்றிருந்தால் இப்படியெல்லாம் தரங்கெட்ட அறிக்கை விட மாட்டார். தகுதிக்கு மேற்பட்ட பதவியை “விபத்தாக” பெற்ற காரணத்தால் அமைச்சர்,  தி.மு.க.வின் வரலாறு தெரியாமலும்,  வெற்றி நாயகனாம் எங்கள் கழகத் தலைவரின் பெருமைகள் தெரியாமலும் உளறிக் கொட்டுவது “ஊழல் ஆணவத்தின்” உச்சக்கட்டம் என்றே கருதுகிறேன். இந்த திரு உதயகுமார் எப்படிப்பட்ட யோக்கியர்?  ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்தவரை “காலணி அணியாமல்” ஒரு வேடம் போட்டார்.  அவர் மறைந்ததும் “தியாகத்தின் திருவுருவே வருக… அரசுக்கு தலைமையேற்க வருக” என்று திருமதி சசிகலாவிற்காக தனி வேடம் போட்டார். 

“விசுவாசத்தை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து கற்றுக்கொண்டோம்” என்று கூறி - “கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும்” என்று கூறி பிறகு திருமதி சசிகலா காலையும் வாரி விட்ட யோக்கிய சிகாமணிக்கு எங்கள் தளபதி பற்றியெல்லாம் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? “எடப்பாடியாரும், பன்னீரும் மருது சகோதரர்கள்” என்று மருது சகோதரர்களின் புகழ் பெற்ற வரலாறே தெரியாமல் திடீரென்று சுயநலனுக்காக பாராட்டுவார். 

 

பிறகு “முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி பண்பாளர். பணிவாளர்” என்று காதைப் பிளக்கும் ஜால்ரா அடிப்பார். பச்சோந்தியை விட படு வேகமாக நிறம் மாறும் அமைச்சர் திரு உதயகுமாருக்கு அரசியல் ஒரு கேடா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.  புதுப்புது வேடம் போடுவதில் கில்லாடியாக இருக்கும் திரு உதயகுமார், மேடைக்கு வேண்டுமானால் நடிக்கலாம். அது அரசியலுக்கு அசிங்கமாகக்கூட அல்ல; மகா கேவலமாக இருக்கும் என்பதை ஏனோ பதவி மயக்கத்தில் மறந்து விட்டு தடுமாறி நிற்கிறார். 

மறைந்த எங்கள் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் பற்றியெல்லாம் கருத்துக் கூற “துரும்பு” அளவிலான தகுதிகூட திரு உதயகுமாருக்கு இல்லை. ஆளுக்கு ஏற்றவாறு அடித்த ஜால்ராவால் அமைச்சர் பதவி பெற்றால் மட்டும் அந்தத் தகுதி வந்து விடுமா? அல்லது ஊழல்…ஊழல் என்று வருவாய்த் துறையில் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதால் வந்து விடுமா? இயற்கை பேரிடருக்கு கொடுத்த நிதியை எல்லாம் திரு உதயகுமார் எப்படிச் சுருட்டியிருக்கிறரார்?  எங்கள் கழகத் தலைவர் அளித்துள்ள அறிக்கையினால் தமிழக மக்களிடம் சில தினங்களாக பேட்டி, முழுப்பக்க பத்திரிக்கை விளம்பரம் போன்றவற்றால் போட்ட “நல்லாட்சி வேடம் கலைந்து விட்டது” என்ற எரிச்சலில் அமைச்சர் திரு உதயகுமார் அலறுகிறார்;  அறிக்கை விடுகிறார். ஆனால் நாவடக்கம் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

அமைச்சர் என்பதால் எதை வேண்டுமானாலும் அறிக்கையாக விடலாம்; எங்கள் கழகத் தலைவரை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று நினைத்தால் - திரு ஆர் பி உதயகுமார்தான் எதிர்காலத்தில் அரசியல் அனாதையாக வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்து, அவர் செய்த ஊழல்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையா? அல்லது மதுரை மத்திய சிறைச்சாலையா என்பதை இப்போதே திரு உதயகுமார் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.