Asianet News TamilAsianet News Tamil

இப்படி ஒரு அண்டப்புளுகு , வெட்கங்கெட்ட விளம்பரம் திமுகவுக்கு தேவையா? சுளீர் கேள்விகளால் தெறிக்கவிடும் பாமக அருள்ரத்தினம்...

உலக தலைவர்கள் வரிசையில் ஐநா சபையில் பேச மு.க. ஸ்டாலினை அந்த ஐநா சபையே அழைத்துள்ளது" - இப்படி ஒரு அப்பட்டமான கட்டுக்கதையை, வெட்கமே இல்லாமல் திமுகவினர் பரப்பி வருகின்றனர்! என பாமகவின் அருள் ரத்தினம்  கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

DMK's fake advertisement about United Nations called stalin says arul rathinam
Author
Chennai, First Published Aug 27, 2019, 12:57 PM IST

உலக தலைவர்கள் வரிசையில் ஐநா சபையில் பேச மு.க. ஸ்டாலினை அந்த ஐநா சபையே அழைத்துள்ளது" - இப்படி ஒரு அப்பட்டமான கட்டுக்கதையை, வெட்கமே இல்லாமல் திமுகவினர் பரப்பி வருகின்றனர்! என பாமகவின் அருள் ரத்தினம்  கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது ஃ பேஸ் புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அழைக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில்... ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தற்போதைய நிலை, காஷ்மீரில் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து மு.க.ஸ்டாலின் விவாதிப்பார்" - இப்படி ஒரு மாபெரும் 'பொய்' செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியாவின் தமிழ் இணையப்பதிப்பு வெளியிட்டுள்ளது. இதே செய்தி தினத்தந்தியிலும் வெளியாகியுள்ளது.

உண்மை என்ன?

மு.க. ஸ்டாலினுக்கு ஐநா மனித உரிமைகள் பேரவை சார்பில் எந்த அழைப்பும் அனுப்பப்படவே இல்லை. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுகவினர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதன் ஒப்புகை சீட்டை வைத்துக்கொண்டு, "ஐநா சபையே மு.க. ஸ்டாலினை அழைத்தது" என கதை கட்டுகிறார்கள்! ஆனால், இவர்கள் பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டிலேயே, அது அழைப்பு அல்ல. கணினியில் தானாக உருவாக்கப்பட்ட சான்று மட்டுமே என்று கூறியுள்ளார்கள் (This is not an invitation but a confirmation of registration generated automatically). (இது விசா விண்ணப்பத்திற்கு மட்டும் தான் உதவும்).

DMK's fake advertisement about United Nations called stalin says arul rathinam

உண்மையில், ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டங்களில் பார்வையாளராக பங்கேற்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும், பேசவும், துணைக்கூட்டம் நடத்தவும் ஐநா அவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகளுக்கு அனுமதி உண்டு. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அத்தகைய ஒரு அமைப்பு ஆகும் (NGO in Special Consultative with the United Nations ECOSOC). பசுமைத் தாயகம் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டால், யாருக்கு வேண்டுமானாலும், மு.க. ஸ்டாலினுக்கு வந்தது போன்ற கடிதம் வரும். (அதற்கான பதிவு செய்யும் இணைப்பை முதல் பின்னூட்டத்தில் காணலாம்).

அதே போன்று, பிரான்சில் உள்ள Association Bharathi Centre Culturel Franco-Tamoul எனும் ஒரு NGO சார்பில் மு.க. ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதற்கான ஒப்புதல் சீட்டை ஐநாவின் கம்ப்யூட்டர் தானாக அனுப்பியுள்ளது (confirmation of registration generated automatically). அதை வைத்து திமுகவினர் கம்பு சுத்துகிறார்கள்.

மேலும், நடைபெற இருக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆம் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்த விவாதம் இடம்பெறவில்லை. ஈழத்தமிழர் விவகாரம் அடுத்த ஆண்டு 2020 மார்ச் மாதம் நடைபெறும் 43 ஆவது கூட்டத்தில் தான் வர இருக்கிறது.

இந்நிலையில், "உலக நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஐநா சபை அழைத்துள்ளது" என்றும், கூட்டத்தின் அஜெண்டாவிலேயே இல்லாத "ஈழத்தமிழர் விவகாரம் குறித்து மு.க. ஸ்டாலின் பேசுவார்" என்றும் கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் டைம்ஸ் ஆப் இந்தியா எழுதுகிறது.

இதில் மிகப்பெரிய வெட்கக்கேடு என்னவென்றால், இந்த தானியங்கி ஒப்புகை கூட - பிரான்ஸ் நகரில் உள்ள Association Bharathi Centre Culturel Franco-Tamoul அமைப்புக்கு தான். திமுகவுக்கு இல்லை! (மாறாக, பசுமைத் தாயகம் சார்பில் கலந்துகொள்கிறவர்கள் எல்லாம் நேரடியாக பசுமைத் தாயகம் சார்பில் கலந்துகொள்கிறார்கள்).

"திமுகவின் வெட்கம்கெட்ட விளம்பரம்: இது முதல்முறை அல்ல!"

பொய்யான கட்டுக்கதைகள் மூலம் அப்பட்டமாக புளுகுவது, திமுகவினருக்கு இது முதல் முறை அல்ல. இப்படித்தான் காலம் காலமாக பொய்யான பிம்பங்களை பொய்ச்செய்திகள் மூலம் உருவாக்கி ஏமாற்றி வருகிறார்கள். 'திமுக தலைவர் கலைஞருக்கு ஆஸ்திரியா நாடு அஞ்சல் தலை வெளியிட்டது' என்றும், மு.க. ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் தலைசிறந்த 'கென்டக்கி கர்னல்' விருது வழங்கப்பட்டது என்றும் மாபெரும் பொய்களை வெட்கமே இல்லாமல் அள்ளி விட்டவர்கள் தான் திமுகவினர்!

ஐநா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் என்பவர் அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் மு.க .ஸ்டாலினை புகழந்துள்ளதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பிய போது, அந்த ஜான் எலியாசனே கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரம் விநோதமானது (strange), வெட்கம் கெட்டது, பொய்ப்பித்தலாட்டம் என்பதாகவெல்லாம் அவர் திமுகவினரை கண்டித்தார்.

DMK's fake advertisement about United Nations called stalin says arul rathinam

நடக்காத ஐநா கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை: மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு!

மு.க. ஸ்டாலினை ஐநா அழைத்துள்ளதாக திமுகவினர் இப்போது ஓட்டுவது கூட புதிய படம் இல்லை. இது ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் ஓட்டிய பழைய படம் தான்!

2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூடிய ஐநா மனித உரிமைகள் பேரவையின் 35 ஆம் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆனால், இல்லாத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - அப்போதே ஒரு மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்தினர்.

அப்போது திமுக வெளியிட்ட அறிக்கையில் "ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்" என்று மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. ஆனாலும், இல்லவே இல்லாத ஒரு கூட்டத்திற்கு தான் ஆழைக்கப்பட்டதாகவும், ஆனால் 'சட்டமன்ற அலுவல்கள் காரணமாக, தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதினார்.

இப்படியாக, பொய்யான கட்டுக்கதைகளை கட்டமைத்து, தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றுவது திமுகவுக்கு கைவந்த கலை. இப்படித்தான் காலம் காலமாக பொய்யான பிம்பங்களை பொய்ச்செய்திகள் மூலம் உருவாக்கி ஏமாற்றினார்கள். அண்மை தேர்தலில் கூட 'கடன் தள்ளுபடி' என்று பொய்யுரைத்து வாக்குகளை வாங்கினார்கள்! என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios