Asianet News Tamil

பிஎஸ்பிபி பள்ளிக்கு எதிராக நடந்தால் தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்படும்... சு.சுவாமி கடும் எச்சரிக்கை..!

பள்ளியை மூடுவது, நிர்வாகத்தை மாற்றுவது என, அரசு தரப்பு முயற்சித்தாலே போதும். அப்படியெல்லாம் செய்து முடிக்க, அவர்கள் கையில் ஆட்சி இருக்காது

DMK rule will be dissolved in Tamil Nadu if PSBB acts against the school ... Subramanian Swamy issued a stern warning
Author
Tamil Nadu, First Published May 28, 2021, 11:06 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் பல்வேறு தரப்பினருக்கு இடையே உள்ள காழ்ப்புணர்ச்சியாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு சாரார் பள்ளி நிர்வாகத்தின் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில், நியாயமான விசாரணையை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், உள்நோக்கத்தோடு அரசு தரப்பில் செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை'' என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி கூறி உள்ளார். 

பத்மசேஷாத்ரி பள்ளி விவகாரம் இப்போது இந்திய அரசியல் வரை எட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக., தி.க. தரப்பினரும் , பிற மதத்தை சார்ந்தவர்களும் உள்நோக்கத்தோடு பள்ளிக்கு எதிராக சதி வேலைகளில் இறங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறுகையில், ‘’பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது, பாலியல் புகார் எழுந்துள்ளது. அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆசிரியர் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்தும், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. பள்ளியில் நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து, தீவிர விசாரணை நடப்பது வரை எதுவும் தவறில்லை. ஆனால், குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு எதிராக வன்மத்தோடு, சிலர் திராவிடர் கழக முத்திரையுடன், சமூக வலைதளங்களில் வேகமாக இயங்கி வருவதும், அதை வைத்து, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது போல, ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். அது தான் தவறு.

நீண்ட காலத்துக்குப் பிறகு தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கிறது. பெரிய மெஜாரிட்டியில் வெற்றி பெற்று வரவில்லை. அதனால், எல்லா விஷயங்களிலும் தீர்க்கமாகவும், தெளிவாகவும் செயல்பட வேண்டும். இல்லையென்றால், ஆட்சியை கலைக்கும் சூழல் உருவாகும். அரசு, இந்த விஷயத்தில் உள்நோக்கம் கொண்டு பள்ளி நிர்வாகத்தை நசுக்க நினைத்தால், ஆட்சியை கலைப்பதை தவிர, வேறு வழியில்லை. கட்டாயம் அதை செய்து காட்டுவேன்.

தி.மு.க.,வுக்கு பின்புலமாக இந்த விஷயத்தில், தி.க., தான் செயல்படுகிறது. தி.மு.க., ஆட்சி மிக சுலபமாக ஏற்பட்டு விடவில்லை. ஸ்டாலினின் மனைவி துர்காவின் கடவுள் சிந்தனை, வழிபாடு இவைகளின் பலனாகத்தான், ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை, அவர் நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியில் சிறந்ததாகச் சொல்லப்படும் பள்ளி என்றால், அதில் எப்படியாவது தம் பிள்ளைகளுக்கு 'சீட்' வாங்கி விட வேண்டும் என்று தான் எல்லா பெற்றோரும் நினைப்பர். அதற்காக, பல்வேறு வகையில் சிபாரிசுகளையும் செய்வர். அப்படி, இந்தப் பள்ளியில் சீட் கேட்டு சிபாரிசு செய்தவர்கள் பலரையும், நிர்வாகத்தினர் ஆணவத்தோடு அவமரியாதை செய்திருக்கின்றனர். அதெல்லாம் கூட, இந்தப் பிரச்னை பூதாகரமாக்கப்படுவதன் பின்னணியாக இருக்கின்றன.

அதனால், இதன் பின்பாவது பள்ளி நிர்வாகம் ஆணவத்தோடு நடப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை விசாரணை ஒரு தலைபட்சமில்லாமல் நேர்மையாக நடக்க வேண்டும். அதில் துளி அளவு சந்தேகம் ஏற்பட்டாலும், தமிழகத்தில் விசாரணை நடக்கவிடாமல் செய்து விடுவேன். அதற்கான சட்ட நுணுக்கங்கள் எனக்குத் தெரியும். அதேபோல, பள்ளியை மூடுவது, நிர்வாகத்தை மாற்றுவது என, அரசு தரப்பு முயற்சித்தாலே போதும். அப்படியெல்லாம் செய்து முடிக்க, அவர்கள் கையில் ஆட்சி இருக்காது’’என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios