2021-ஆம் ஆண்டுக்கான நல்லாட்சிக் குறியீட்டை மத்திய அரசு தயாரித்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில், நீதித் துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ஆம் ஆண்டுக்கான நல்லாட்சிக் குறியீட்டில், நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நல்லாட்சித் தினத்தையொட்டி மத்திய நிர்வாகச் சீர்த்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை 2021-ஆம் ஆண்டுக்கான நல்லாட்சிக் குறியீட்டைத் தயாரித்துள்ளது. இதில், நீதித் துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதேபோல வணிகம் & தொழில்கள் துறையில் ஆந்திரா, மனித வள மேம்பாட்டு துறையில் தெலங்கானா, பொது சுகாதாரத்தில் கேரளா, பஞ்சாப்; பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகளில் கோவா; பொருளாதார நிர்வாகத்தில், சமூக நலன் மற்றும் மேம்பாட்டில் குஜராத் ஆகிய மாநிலங்கள் முதலிடத்தைப் பிடித்தன. இந்தப் பட்டியலை டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிட்டார். 
இந்தியாவில் 17 மாநிலங்களில் பாஜக அல்லது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், குஜராத், கோவா என இரு பாஜக ஆட்சி செய்யும் மா நிலங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ள்ளன. பிற இடங்களை தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பஞ்சாப் என எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அரசுகள்தான் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலை வெளியிட்ட பிறகு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “பிரதமர் மோடி அரசு வழங்கி வரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தனர். பிரதமர் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியுள்ளனர். 2014- ஆம் ஆண்டு முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள் கூட இல்லை. அதற்குக் காரணம், தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை மோடி அரசு கடைபிடித்து வருவதுதான்” என்று அமித் ஷா பேசினார்.
