தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் திமுக மகளிரணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் அதிமுவைச் சேர்ந்தவர்கள்தான். சில தினங்களுக்கு முன்புகூட அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த நபர், அதிமுக அமைச்சர்களுடன் பணியாற்றிய போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக அரசு குற்றவாளிகளைக் காப்பாற்றத்தான் அக்கறை காட்டுகிறதே தவிர, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க அக்கறை காட்டவில்லை. திமுக தொடர் போராட்டத்தின் காரணமாகத்தான் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2 ஆண்டுகள் கழித்து இப்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை வேகமாக நடைபெற வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை.
10 ஆண்டுகாலத்தில் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன் பின்னர் திமுக ஆட்சியில் செய்ததைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். திமுக மக்களுக்கு செய்தது பற்றியெல்லாம் கடந்த தேர்தல் அறிக்கையிலேயே உள்ளது. வேண்டுமென்றால், முதல்வருக்கு ஒரு காப்பி அனுப்பவும் தயார். திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது எந்த ஊழல் வழக்கும் நிரூபிக்கப்படவில்லை. அவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்குகள். இன்னும் 3 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். மக்கள் கிராம சபையில் பெற்ற மனுக்களுக்கு தீர்வு காணப்படும். அதிமுக 10 வருடமாக செய்ய தவறியதை நாங்கள் செய்வோம்” என்று கனிமொழி தெரிவித்தார்.