MK Stalin : அடுத்த 5 ஆண்டும் 'திமுக' ஆட்சிதான், தமிழ் மக்களே அதற்கு சாட்சி ! " - திருப்பூரில் பேசிய ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்து 6 மாதம்தான் ஆகிறது, அதற்குள் இவ்வளவு செய்துள்ளோம் இன்னும் நான்கரை ஆண்டுகளில் என்ன செய்யவுள்ளோம் என எண்ணிப் பாருங்கள், அடுத்த 5 மாதம் அல்ல 5 ஆண்டுகாலமும் இதுபோலத்தான் பணி செய்வோம் என்று திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பேசியிருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்
![DMK rule for the next 5 years is witnessed by the Tamil people - Chief Minister Stalin speaking in Tirupur DMK rule for the next 5 years is witnessed by the Tamil people - Chief Minister Stalin speaking in Tirupur](https://static-gi.asianetnews.com/images/01fn59ht86we40bcfv877z8w1e/14323--1-_363x203xt.jpg)
திருப்பூருக்கு வருகை தந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டார். முடிவுற்ற திட்டப்பணிகளை துவங்கி வைத்தல் , புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் , பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் துவக்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ‘காலையில் கோவையில் நடந்த அரசு விழா, தற்போது திருப்பூரில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி. திருப்பூருக்கு நிறைய சிறப்பு உண்டு. அண்ணா, பெரியார் சந்தித்த பகுதி திருப்பூர் தான். இந்த பகுதியில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏழையின் சிரிப்பில் இறைவன் பார்ப்பது போல உங்களை பார்க்கிறேன். 4, 109 குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயனடைகிறார்கள். இந்த மாவட்டத்தின் அமைச்சர்கள் என்னை சந்தித்து, கோவை வரும் போது இங்கும் வாருங்கள் என்றனர். 2 நாட்களில் இதனை நடத்தியுள்ளனர். உங்கள் பகுதி அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். அடுக்குமாடி, வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவி, குடும்ப அட்டை என பல திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தபோது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது, இனத்தின் ஆட்சியாக இருக்கும் என தெரிவித்தேன். அதேபோல் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் ‘நல்லாட்சி’ என்ற பெயர் எடுத்தோம்.
ஆனால் கடந்த ஆட்சியில் என்ன நடந்தது என்று பேச விரும்பவில்லை. இதில் அரசியல் பேசவும் விரும்பவில்லை , அதற்கென வேறு மேடை இருக்கிறது. கடந்த 10 ஆன்டுகாலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சின்னாபின்னாமாக்கப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்ல, திருப்பூரையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக திருப்பூர் நகராட்சி வளர்ச்சி குழுமம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 6 மாதம் தான் ஆகிறது அதற்குள் இவ்வளவு செய்திருக்கிறோம் என்றால், இன்னும் நான்கரை ஆண்டுகளில் என்ன செய்ய இருக்கிறோம் என எண்ணி பாருங்கள். நம் பணிகளை, சாதனைகளை அன்டை மாநிலம் மட்டுமல்ல, அண்டை நாடுகள் எல்லாம் பாராட்டுகின்றன. அவை எனக்கான பாராட்டுக்கள் அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்காக நம்பர் 1 முதல்வர் அல்ல, நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை. அடுத்த 5 ஆண்டுகாலமும் இதுபோலத்தான் பணி செய்வோம். உத்தரவிடுங்கள் உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன். எங்களை உற்சாகப்படுத்துங்கள் என்று கூறினார்.