தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதால் திட்டமிட்டப்படி டிசம்பர் 27-ம் மற்றும் 30-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்போவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 7-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 9-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வழக்கில், வார்டுகளில் இட ஒதுக்கீடு மற்றும் மகளிர் மற்றும் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் மறுசுழற்சி ஆகியவற்றை சரி செய்த பின்னர்தான் தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. புதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சித் தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுழற்சி முறையில் வழங்க வேண்டிய பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1991 மக்கள் தொகை கணக்கீட்டை இப்போதும் பயன்படுத்துகின்றனர். தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலேயே இதை தெளிவாக கூறியுள்ளனர் என்று தெரிவித்தார்.

அதேபோல், தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், தேர்தலை சந்திக்க திமுகவுக்கு விருப்பமில்லை. அதனால்தான் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை திமுக சரியாக படிக்கவில்லை. ஆகவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சொல்வது அனைத்து பொய் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, 2011 மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு தேர்தலை நடத்தினால் உங்களுக்கு சம்மதமா? என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே திமுகவிற்கு கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உள்ளாட்சி தேர்தலை தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கின் அடிப்படையிலேயே ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.