ராஜ்யசபா எம்பி வேட்பாளர் பட்டியலை திமுக மேலிடம் வெளியிட்ட நிலையில் கொங்கு மண்டலத்தில் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2001 சட்டமன்ற தேர்தல் முதலே கொங்கு மண்டலம் திமுகவிற்கு எட்டாக்கனியாகவே உள்ளது. 2004 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் மட்டுமே கொங்கு மண்டலம் திமுக கூட்டணிக்கு வாக்களித்தது. இடைப்பட்ட அத்தனை சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக கொங்கு மண்டலத்தில் படு தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர்கள் திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததது தான். 2011 தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்றக்கழகம் திமுகவுடன் கூட்டணி வைத்தும் கூட கடும் தோல்வி ஏற்பட்டது.

திமுகவுடன் கூட்டணி அமைத்த காரணதினால் கொங்குநாடு முன்னேற்றக்கழகத்தால் கூட ஒரு தொகுதியிலும் அங்கு வெற்றி பெற முடியவில்லை. திமுகவின் இந்த சோகம் கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்லிலும் எதிரொலித்தது. எம்பி பதவிகளை வென்ற நிலையிலும் கூட கொங்கு மண்டலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை திமுக வேட்பாளர்களால் வெல்ல முடியவில்லை. இதற்கு முழுக்காரணம் திமுக குறிப்பிட்ட ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது தான் என்று திமுக நிர்வாகிகளே கூறி வருகின்றனர்.

மேலும் கொங்கு மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் திமுக மற்றும் அக்கட்சியின் கூட்டணி என்றும் தோழமை என்றும் கூறிக் கொள்பவர்கள் எதிர்மறை கருத்துகளை பரப்புவதும் கொங்கு மண்டலத்தில் திமுக பின்னடைவை சந்திக்க காரணம் என்கிற பேச்சும் உண்டு. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமுதாய பெண்களை வேறு ஜாதி இளைஞர்கள் காதலித்து அழைத்துச் செல்லும் விவகாரத்தில் தொடர்புடைய கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது தான் அக்கட்சி மீதான அதிருப்திக்கு காரணம் என்றும் பேச்சுகள் உண்டு.

இந்த நிலையில் மாநிலங்களவை எம்பி பதவியில் ஒரு இடம் கவுண்டர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பட்டியலில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த திமுக பிரமுகர்களின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் கொங்கு மண்டலத்தில் திமுக தனது வேட்பாளரை அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்த அந்தியூர் செல்வராஜ் என அறிவித்தது. இதனை அறிந்து கொங்கு மண்டலத்தில் உள்ள திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கொதித்துப்போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இது குறித்து பேச ஸ்டாலினை சந்திக்கவும் அவர்கள் ஆயத்தமாகி வருவதாகவும் சொல்கிறார்கள்.