சேலம் மாவட்டம் கச்சிராப்பாளையம் ஏரியில் மண் அள்ள அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் – கோவை சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தங்களது சொந்த செலவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கியமான ஏரிகளில் திமுக சார்பில் துர்வாரப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு செய்ய வேண்டிய இந்த வேலையை திமுகவே செய்து வருகிறது என அவர்கள் பிரசாரம் வேறு செய்து வருகின்றனர். திமுகவினரின் இந்த செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்குட்பட்ட  கச்சிராப்பாளையம் ஏரியை கடந்த வாரம் திமுகவினர் தூர்வாரி சுத்தம் செய்தனர். இந்த  ஏரியை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் வருகிறார்.

இந்த சம்பவம் அதிமுகவினருக்கு தன்மானப் பிரச்சனையாக மாறியுள்ளது. அதாவது முதலமைச்சரின் சொந்த தொகுதியில் திமுகவினர் ஏரியைத் தூர்வாரி நல்ல பெயர் பெற்று வருவதாக அவர்கள் நினைத்தனர்.

இதைத் தடுக்கும் வகையில் இன்று முதல் அந்த ஏரியில் இன்று முதல் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் இன்று சேலம் – கோவை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.