கடந்த வாரம் அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்தார்.


இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது, பிரதமர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை கமலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தனர். அவர் மீது 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் தான் வரலாற்று உண்மையைத்தான் பேசியிருக்கிறேன் என்றும் எனது பேச்சு சரியானது என்று கூறி கமல் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவரை நோக்கி செருப்பு, முட்டை உள்ளிட்டவற்றை வீசி இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

கமல்ஹாசன் கருத்துக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள்  அனைத்துத்  ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், திமுக மட்டும் கருத்து எதுசம் சொல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் , “இந்த கேள்வியும் எங்களுக்குத் தேவையற்றது, இதற்கான பதிலும் எங்களுக்கு அவசியமில்லாதது என கூறினார்.

ஏனென்றால்  தற்போதைய பிரச்சினைகள் வேறு. ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்த படேலுக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு உலகிலேயே மிக உயர்ந்த சிலை வைத்ததுடன்தான் இதனை ஒப்பிட வேண்டும். படேலுக்கு சிலை வைத்தது எவ்வாறு தேவையற்றதோ அதுபோலதான் இதனையும் தேவையற்றதாக பார்க்கிறேன் என கூறினார்.

கோட்சே ஒரு கொலைகாரன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்போது, அவன் சார்ந்திருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டது. 

இந்து மதம் என்று பேசி வருணாசிரமத்தை புகுத்துகிற ஒவ்வொருவரும் தீவிரவாதிகள்தான். தமிழகம் சாதி, சமயமற்ற சமத்துவப் பகுதி. இங்கு சத்திரியர்கள்தான் ஆண்டார்கள் என்று சொல்ல முடியாது. அனைத்து சாதியினரும் ஆண்டு இருக்கிறார்கள். இங்கு மனுதர்மம் புகுந்த பிறகு மக்கள் பிரித்தாளப்பட்டார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.