திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வலது தொடையில் இருந்த கட்டி சிறிய அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. இன்று மதியம் அவர் வீடு திரும்புவார் என அப்பலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

 மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மருத்துவர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார். 

பின்னர், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பலோ மருத்துவமனையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அப்பலோவில் ஸ்டாலினுக்கு வலது கால் தொடையில் இருந்த நீர்கட்டியை அகற்ற அறுவை கிசிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிந்து இன்று பிற்பகலில் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் என அப்பலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.