இதுபோன்ற சூழலில், பாஜகவின் கலாச்சாரத் திணிப்பை தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும், தமிழைப் புறக்கணித்து, இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் ‘தாலாட்டு’பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து, இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட விரும்புகிறது. 

பாஜகவின் கலாச்சாரத் திணிப்பை தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும், தமிழைப் புறக்கணித்து, இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் ‘தாலாட்டு’பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து, இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட விரும்புகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:


“மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம்” என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், திருக்கோயில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து, பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில் ‘தொல்லியல் துறை’ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து, பராமரிப்பு இல்லாமல் கிடக்கிற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதி.