நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொய்யான மிட்டாயைக் கொடுத்து வெற்றி பெற்றது என்றால், தேனியில் அதிமுக அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.  
அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதனையடுத்து தேனியில் அவருடைய ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழாவும் பொதுக்கூட்டமும் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரபாண்டியில் இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
 “சென்னை அண்ணா அறிவாலயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்ததைப் போல தேனியில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்திருக்கிறார்கள். உங்கள் எல்லோரையும் திமுக மிகச் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும். அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆரே இருந்த இயக்கம்தான் திமுக. இதைத்தான் சட்டப்பேரவையில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் பேசினார். எம்.ஜி.ஆருக்கே தலைவராக கருணாநிதி இருந்தார் என்பதைப் பெருமையாகக் குறிப்பிட்டார்.


தற்போதுள்ள அதிமுக எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக அல்ல. அப்படி இருந்தால், தங்க தமிழ்ச்செல்வன் இங்கே வந்து இணையவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. தன்னுடைய பதவி பறிபோனததால்தான் ஜெயலலிதா மரணத்தில் மர்ம இருப்பதாக ஓ.பி.எஸ். பிரச்னையைக் கிளப்பினார். அதனால்தானே விசாரணை கமிஷன் அமைத்தார்கள். ஆனால், அந்த கமிஷனில் அவர் ஒரு முறைகூட ஆஜராகவில்லையே, ஏன்?  மோடியையும் அமித்ஷாவையும் தலைவராக ஏற்றுக்கொண்டவர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில்  நடைபெறுகிறது. மோடி, அமித்ஷாவுக்கு அண்ணாவையோ எம்ஜிஆரையோ தெரியுமா? பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் இவர்கள் கூனிக்குறுகி பாஜகவோடு நிற்கிறார்கள்.
 நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான மிட்டாயைக் கொடுத்து திமுக வெற்றி வெற்றி பெற்றுவிட்டதாக பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் பேசிவருகிறார். திமுக வெற்றி பெற்ற தொகுதியில் மிட்டாய் கொடுத்தோம் என்றால், அதிமுக வெற்றி பெற்ற தேனியில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி அடைந்தீர்களா? அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களிலும் திமுக வெற்றி பெறும். தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை கருணாநிதி வழிநின்று செயல்படுத்திக் காட்டுவோம்” என மு.க. ஸ்டாலின் பேசினார்.