உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு திமுக மகளிரணி சார்பில் சின்னமலையில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி இப்பேரணி இன்று மாலை நடைபெற்றது. பேரணியை திமுக தலைவர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக மகளிரணி தலைவரும் எம்பியுமான கனிமொழி தலைமையில் நடந்த இந்தப் பேரணி அடுத்த சில நிமிடங்களில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.


இதனையடுத்து கனிமொழிக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர் கனிமொழி மற்றும் திமுக மகளிரணியினரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றியபோது, வேனை நகர விடாமல் திமுகவினர் தடுத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட மகளிரணியினர் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஹத்ராஸ் அராஜகத்தைக் கண்டித்து திமுக மகளிரிணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து. கைது செய்திருக்கிறது தமிழக காவல் துறை. உ.பி. கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது. தமிழ் நாட்டில் பாஜக ஆட்சிதான் நடக்கிறதா? அதிமுக அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும்!” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.