Asianet News TamilAsianet News Tamil

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணி... சென்னை குலுங்கட்டும்... டெல்லி அதிரட்டும்... இது ஸ்டாலின் முழக்கம்!

மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்கிற தமிழ்நாட்டில், எப்போதுமே மதவெறி சக்திகளுக்கும் அவற்றுக்குத் துணை நின்று அடிமைச் சேவகம் செய்வோருக்கும் தமிழக மக்கள் இடமளித்ததில்லை. அந்த உணர்வுடன், டிசம்பர் 23 அன்று குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி, கட்சி எல்லைகளைக் கடந்து, தமிழகத்தின் உணர்வை எதிரொலிக்கும் வகையிலும், இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாத்திடும் வகையிலும் நடைபெறுகிறது. ஜனநாயகத்தில் உறுதி கொண்ட - மதச்சார்பின்மைக் கொள்கையில் தளராத நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும், இளைஞர்களையும் மாணவர்களையும், திரைக் கலைஞர்களையும், வணிகர்களையும், பல துறை சார்ந்த அனைவரையும் பேரணியில் பங்கேற்றிட அன்புடன் அழைக்கிறேன்.
 
DMK President M.K.Stalin letter to dmk functionaries on caa against agitation
Author
Chennai, First Published Dec 22, 2019, 9:31 PM IST

குழிபறிக்கும் குடியுரிமைச் சட்டத்தினைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கட்சி எல்லைகளுக்கு அப்பால் ஓரணியாகத் திரண்டு மக்களின் பேரலை போன்ற பேரணியால் டிசம்பர் 23 அன்று சென்னை குலுங்கட்டும்; அது கண்டு டெல்லி அதிரட்டும். 
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

DMK President M.K.Stalin letter to dmk functionaries on caa against agitation
பன்முகத்தன்மை - வேற்றுமையில் ஒற்றுமை என்னும் நம் பழம்பெரும் பண்பாடு மிளிரும் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் மதச்சார்பற்ற தன்மையை மாய்த்திடும் வகையிலும், மதரீதியாக வெறுப்பை விதைத்து, பிளவுபடுத்தும் முறையிலும் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இந்திய மக்களை மதம் எனும் கோடரியால் பிளக்கின்ற இந்தக் கொடூரச் சட்டத்திற்கு, தமிழ்நாட்டை ஆளுகிற அதிமுக ஆதரவளித்து, அந்த ஆதரவின் காரணமாக சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆபத்தையும் அநீதியையும் உருவாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் உள்ள இறையாண்மைமிக்க-சமத்துவமான-மதச்சார்பற்ற - ஜனநாயகக் குடியரசு என்கிற ஆழமும் அழுத்தமும் நிறைந்த வார்த்தைகளை அர்த்தமிழக்கச் செய்து, அரசியல் சாசனம் தந்துள்ள அடிப்படை உரிமைகளைச் சிதைத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டத்தினை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன முழக்கங்கள் எழுந்து எதிரொலிக்கின்றன. அரசியல் கட்சிகளும் மக்கள் உரிமைக்காகப் பாடுபடும் அமைப்பினரும் களமிறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் தீரமும் எழுச்சியும் மிகுந்த போராட் டம் தீவிரமடைந்து வருகிறது. சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஆட்சியாளர்களோ, அடக்குமுறையால் இவற்றை ஒடுக்கிவிடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.

DMK President M.K.Stalin letter to dmk functionaries on caa against agitation
டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல், லக்னோவிலும் மங்களூருவிலும் நடந்த பேரணிகள் மீது அராஜகத் தாக்குதல், துப்பாக்கிச் சூட்டில் 15க்கும் மேற்பட்டோர் பலி என நாடு முழுவதும் கொந்தளிப்பும் கோபமும்மிக்க போராட்டங்கள் எரிமலையாய் வெடித்து வருகின்றன. இந்நிலையில், தனியார் தொலைக் காட்சிகளையும் கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்களையும் அச்சுறுத்தும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், சட்டம் - ஒழுங்குக்கு எதிரான தேச விரோத மனநிலை கொண்டு  நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்நாட்டின் குடிமக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது தேசவிரோதமாம். அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்துவதும், அவர்களை ஒடுக்க 144 தடையுத்தரவை நடைமுறைப்படுத்துவதும் சட்டம் -ஒழுங்கைப் பாதுகாக்கும் தேச நேய நடவடிக்கையாம்.DMK President M.K.Stalin letter to dmk functionaries on caa against agitation
அச்சுறுத்தல்களாலும் வழக்குகளாலும் மக்களின் உணர்வுத்தீயை ஊதி அணைத்துவிடலாம் என ஆள்வோர் தப்புக் கணக்கு போடுகிறார்கள் ஆள்வோர்கள். ஜனநாயக சக்திகள் ஒருமித்து நிற்கும்போது, அரசதிகாரமும் அத்துமீறல்களும் அடக்குமுறைகளும் ஏதும் செய்ய முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடம்.
பொதுமக்களும் மாணவர்களும் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி, இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் என்பதை அறிந்தும், தெளிந்தும் போராட்டக் களத்தில் உறுதியாக நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட - மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ள பல அமைப்பினரும் இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் நிலையில், மாணவர்களின் அறவழிப் போராட்டமும் நீடிக்கிறது.
இந்நிலையில்தான், திமுக சார்பில் இந்த சட்டத்தை நிறைவேற்றிய பாஜக அரசின் மதவாதப் போக்கையும், அச்சட்டத்தை ஆதரித்த அதிமுகவின் பச்சைத் துரோகத்தையும் கண்டித்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிசம்பர் 23  திங்களன்று, சென்னையில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி நடத்துவது என்றும் முடிவானது. 
மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்கிற தமிழ்நாட்டில், எப்போதுமே மதவெறி சக்திகளுக்கும் அவற்றுக்குத் துணை நின்று அடிமைச் சேவகம் செய்வோருக்கும் தமிழக மக்கள் இடமளித்ததில்லை. அந்த உணர்வுடன், டிசம்பர் 23 அன்று குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி, கட்சி எல்லைகளைக் கடந்து, தமிழகத்தின் உணர்வை எதிரொலிக்கும் வகையிலும், இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாத்திடும் வகையிலும் நடைபெறுகிறது. ஜனநாயகத்தில் உறுதி கொண்ட - மதச்சார்பின்மைக் கொள்கையில் தளராத நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும், இளைஞர்களையும் மாணவர்களையும், திரைக் கலைஞர்களையும், வணிகர்களையும், பல துறை சார்ந்த அனைவரையும் பேரணியில் பங்கேற்றிட அன்புடன் அழைக்கிறேன்.

DMK President M.K.Stalin letter to dmk functionaries on caa against agitation
குழிபறிக்கும் குடியுரிமைச் சட்டத்தினைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கட்சி எல்லைகளுக்கு அப்பால் ஓரணியாகத் திரண்டு, மக்களின் பேரலை போன்ற பேரணியால் டிசம்பர் 23 அன்று சென்னை குலுங்கட்டும்; அது கண்டு டெல்லி அதிரட்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் - ஈழத் தமிழர் உள்ளிட்டோரின் உரிமைகள் மீட்சி பெறட்டும்''.
இவ்வாறு அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios