தந்தை (ஓ.பன்னீர்செல்வம்) அமைச்சராக இருக்கும் குழுமத்திடம் மகன்கள் (ரவீந்திரநாத், ஜெயபிரதீப்) சாதகமான உத்தரவு பெற முயற்சிப்பதும், அனுமதி பெறுவதும் லஞ்ச ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம். அதிகார துஷ்பிரயோகம், ஆதாய முரண் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் இயக்குநர்களாக இருக்கும் ‘விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம், தங்களது பிராஜெக்ட்டுகளை பதிவு செய்துகொள்ள தமிழ்நாடு ரியல் எஸ்டேட் அத்தாரிட்டியிடம் கடந்த ஜனவரி 20 அன்று விண்ணப்பித்திருக்கிறது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் அத்தாரிட்டி ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது. தந்தை அமைச்சராக இருக்கும் குழுமத்திடம் மகன்கள் - அதில் ஒருவர் எம்.பி.. விண்ணப்பத்தில் அவருடைய முகவரி தந்தைக்கு அரசு ஒதுக்கிய இல்லத்தின் முகவரி. சாதகமான உத்தரவு பெற முயற்சிப்பதும், அனுமதி பெறுவதும் லஞ்ச ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம். அதிகார துஷ்பிரயோகம், ஆதாய முரண் (Conflict of Intrest).
தர்மயுத்தத்தைத் துறந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களித்தத்தையும் மறந்து வீட்டு வசதித் துறை அமைச்சர் பதவியை ‘புன்னகை’ மின்ன ஏற்றுக்கொண்டதன் ரகசியப் பின்னணி இதுதானா? துணை முதல்வர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்திடும் உரிமை உண்டு. அவர் சப்தமில்லாமல் ஒதுங்கிக்கொள்ளமாட்டார் என்று நம்புகிறேன்.” என்று அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.