திமுக தூண்டுதலின் பேரில்தான் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் வருகை பாஜகவுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. பாஜக கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சி இடம் பெறுவது குறித்து மேலிடத் தலைமை தான் முடிவு செய்யும்.

தற்போது வரை பாஜக அதிமுகவுடன்தான் கூட்டணி தொடர்கிறது. தொகுதி பங்கீடு குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும். வேளாண் சட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், திமுக தூண்டுதலின் பேரில்தான் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என்றெல்லாம் பேசுகிறார். கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது என விமர்சனம் செய்துள்ளார்.