பாலியல் புகாரில் சிக்கியுள்ள வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கி தி.மு.கவினர் யாரும் பேச வேண்டாம் என்று அக்கட்சியின் மேலிடம் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளது.

கடந்த 8ந் தேதியே வைரமுத்து குறித்து பாடகி சின்மயி ட்விட்டரில் கருத்துகளை பதிவிட ஆரம்பித்துள்ளார். முதலில் இதனை சீரியசாக எடுத்துக் கொள்ளாத வைரமுத்து பின்னர் சின்மயி தரப்புக்கு தூது அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் சின்மயி வைரமுத்துவை அம்பலப்படுத்துவதில் மிக உறுதியாக இருந்துள்ளார். இதனால் தனக்கு நெருக்கமான சினிமா பி.ஆர்.ஓக்கள் மற்றும் மேனேஜர்களை சமாதானம் பேசுமாறு வைரமுத்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் யாரையுமே சின்மயி சந்திக்க கூட மறுத்துள்ளார். ஒரு கட்டத்தில் வைரமுத்து குறித்து வெளிப்படையாக பேசினால் வேறு பாடல் ஆசிரியர்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற மறுப்பார்கள், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காது என்று சாஃப்ட் பிளாக்மெயில் கூட சின்மயியை செய்து பார்த்துள்ளனர். ஆனால் எதற்கும் மசியாத சின்மயி வைரமுத்து மீதான புகார்களை தீவிரப்படுத்தியுள்ளார்.



இதனால் வீட்டிற்குள்ளும் புயல் அடிக்க ஆரம்பித்த காரணத்தினால் தனது அரசியல் தொடர்புகளை வைரமுத்து நாடியதாக கூறப்படுகிறது. ஆண்டாள் விவகாரத்தில் சப்போர்ட் செய்து தர்மசங்கடத்தை அனுபவித்தது போல் சின்மயி விவகாரத்தில் வைரமுத்துக்கு சப்போர்ட் செய்ய வேண்டாம் என்று தி.மு.க மேலிடம் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளது. இதனால் தி.மு.க தரப்பில் இருந்து வைரமுத்துவுக்கு எந்த உதவியும் செல்லவில்லை.