திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு காய்ச்சல் இருப்பதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் வீட்டிற்கு அழைத்து சென்று நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். 

அப்போது தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதியிடம், ஆர்.எஸ். பாரதி அப்போதே கோரிக்கை விடுத்தார். மேலும் தனது மகன் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு காய்ச்சல் இருப்பதை தொடர்ந்து, தொற்று பாதிப்பு சோதனை மேற்கொள்ள மாநகராட்சி சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. இதையடுத்து சென்னை ஆலந்தூரில் உள்ள பரிசோதனையை, மையத்திற்கு சென்ற அவரின், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளது.