ரஜினிக்கு எதிராக வெளியான கட்டுரையால் தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் நேற்றைய பதிப்பு சுடச்சுட விற்பனையாகியுள்ளது. 

முரசொலி நாளிதழ் குறித்து தெரியாதவர்கள் தமிழக அரசியல் தெரியாதவர்களாக மட்டுமே இருப்பார்கள். ஏனென்றால் சுமார் 75 ஆண்டுகளாக தி.மு.கவின் ஊதுகுழலாக முரசொலி இருந்து வருகிறது. தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் தொடங்கி சாமான்ய தொண்டர்கள் வரை பலரும் முரசொலி நாளிதழுக்கு சந்தாதாரர்கள். தவிர மாற்று கட்சியினரும் கூட தி.மு.க செய்திகளை தெரிந்து கொள்ள நாடுவது முரசொலியைத் தான். 

ஆனால் சர்குலேசன் என்று பார்த்தால் சந்தாதாரர்களை தவிர வேறு யாரும் அவ்வளவாக முரசொலியை வாங்கிப்படிப்பதில்லை. முக்கிய நகரங்களின் பேருந்து நிலையங்களில் உள்ள செய்தித்தாள் கடைகளில் முரசொலி விற்பனைக்கு கொடுக்கப்படும். ஆனால் பெரும்பாலான நாட்கள் கொடுக்கப்படும் முரசொலியை சர்குலேசன் நபர்கள் ரிட்டர்ன் எடுப்பது தான் வாடிக்கை. ஆனால் நேற்று வெளியான முரசொலி நாளிதழ்கள் அனைத்தும் சுடச்சுட விற்பனையாகியுள்ளன. 

அதாவது நேற்று வெளியான முரசொலியில் ஒன்று கூட ரிட்டர்ன் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. அதிலும் சென்னையில் உள்ள நாளிதழ் விற்பனை கடைகளில் மாலை வரை பலரும் முரசொலி நாளிதழ் கேட்டு வாங்கிச் சென்றுள்ளனர். சில கடைகளில் முரசொலி தீர்ந்துவிட்டது என்று கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் நடிகர் ரஜினி குறித்து முரசொலியில் வெளியான கட்டுரை. அண்மை காலமாக எடப்பாடி பழனிசாமி, மோடி, தினகரன் போன்றோரை விமர்சித்தும் கிண்டல் செய்தும் மட்டுமே முரசொலியில் செய்திகள் வெளியாகும். ஆனால் முதல் முறையாக பாதி பத்தியில் ரஜினியை விமர்சித்து மிகப்பெரிய கட்டுரை வெளியானது. அதாவது ரஜினியை அவரது ரசிகர்கள் கேள்வி கேட்பது போன்ற கட்டுரை தான் அது.

 

 இது குறித்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியநிலையில் அப்படி என்ன தான் முரசொலியில் எழுதப்பட்டுள்ளது என்று ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் முரசொலியை வாங்கி படித்துள்ளனர். இதே போன்று மாற்று கட்சியினரும் கூட ரஜினி குறித்து தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் அப்படி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.

 இதனால் தான் நேற்று ஒரே நாளில் முரசொலி முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளது. ஒரு வகையில் கட்டுரையை படித்து ரஜினி ரசிகர்கள் எரிச்சல் அடைந்தாலும் கூட தங்கள் தலைவரை பற்றி எழுதியதால் ஒரே நாளில் முரசொலி பிரபலமாகிவிட்டதாக கூறித் திரிகின்றனர்.