எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி இன்று  காலை 11 மணிக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரை சந்தித்து  வலியுறுத்தவுள்ளனர்.

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்த பிறகு, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்19 பேர்  ஆளுநர் வித்யா சாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடத்தனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அரசு மீது  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தி, எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் கடந்த 27 ஆம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்தனர். 

தற்போதுள்ள சூழ்நிலையில், இந்த பிரச்னையில் தலையிட முடியாது என்றும்  சட்டம் அதற்கு இடம் தரவில்லை எனவும் ஆளுநர் மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.  

திமுக எம்.பி.க்களுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரும் சென்று குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.

இப்பிரச்சனையில் குடியரசுத்தலைவரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டரீதியாக இதனை  அணுகுவோம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.