நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்; எம்.பி.களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தமிழக பிரச்சினைகள் குறித்து அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக வருகின்ற 18ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்ட தொடர் நடைபெற உள்ள நிலையில் அந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு விவாதிக்க வேண்டும், எந்தெந்த பிரச்சினைகள் தொடர்பாக பேச வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது. மேலும், இந்த கூட்டத்தில் திமுகவில் உள்ள அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இந்த கூட்டத்தில் தலைமை வகித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
குறிப்பாக காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பொருட்படுத்தாமல் மழை குறைபாட்டை காரணம் காட்டி தமிழ்நாட்டின் நீரை கர்நாடகா மாநிலம் விடுவிக்காமல் இருப்பது தொடர்பாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை உடனடியாக வழங்க ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வினால் தமிழகத்தில் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட பிறகும் ஒன்றிய அரசு அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்.
மனசாட்சினு ஒன்னு இருந்தா உரிமைத் தொகை திட்டத்தை குறை சொல்ல மாட்டாங்க - அமைச்சர் ஆவேசம்
மேலும், தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் குரல் எழுப்ப வேண்டும் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்தால் இரண்டு அவைகளிலும் எதிர்த்து வாக்களிக்க திமுக எம்பிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.
ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய உரிய நீரை வழங்கிட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உரிய முறையில் தெரிவிப்பதற்காகவும், காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஜல்சக்தி அமைச்சரை தமிழகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து கட்சியில் உள்ள நாடாளுமன்ற பிரதிநிதிகள் உடன் இணைந்து சந்திக்க இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி நதி நீர் பிரச்சினை என்பது தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினை அதனால் எந்த விதமான அரசியல் பாகுபாடும் இல்லாமல் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அதிமுக, பாஜகவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது குறித்து தெரிவித்திருப்பதாக கூறினார்.
காவிரி விவகாரத்தில் 10 முதல்வர்களை பார்த்துவிட்டேன்; கர்நாடகாவுக்கு துரைமுருகன் கண்டனம்
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்கள் ஆனால், எதற்காக இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் தமிழகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.