நட்சத்திர ஓட்டலில் பீர்க்காக  தகராறு செய்ததையடுத்து திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா,மற்றும் தனியார் நிறுவன அதிகாரியும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி புகார் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். பஜாஜ் நிறுவனத்தின் மண்டல தலைமை அதிகாரியாக ஆக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு அண்ணாசாலையில் உள்ள தி பார்க் தனியார் நட்சத்திர ஓட்டலில்  மது குடித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா, ஸ்ரீராமை பார்த்து 4 பீர் வாங்கி வரும்படி மிரட்டி பீர் பாட்டிலால் மண்டையில் அடிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. மேலும் சூர்யா கையிலிருந்த டார்ச்சை கொண்டு அடிக்க முயன்று கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம் இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கோரி புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைப்போல திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யாவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், “நட்சத்திர ஓட்டலில் நண்பர்கள் நால்வருடன் பிறந்தநாள் விழாவிற்கு வந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன். பிறகு கார் பார்க்கிங்கில் நின்றுகொண்டு பீர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அப்போது அங்கு வந்த ஸ்ரீராம், எனது நண்பரின் கையில் இருந்த பீர் பாட்டிலை பிடுங்கி குடித்தபோது அதற்கு “ஏன் இப்படி செய்கிறாய்” என்று கேட்டேன். அதற்கு என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஸ்ரீராம் தன் காரில் இருந்த கத்தியை எடுத்து என்னை தாக்க வந்தார். இதற்கு அங்கு இருந்த செக்யூரிட்டி மேனேஜர் கார்த்திக் என்பவரும் உடந்தை. பவுன்சர்களை கொண்டு தன்னை பிடித்துக் கொண்டு ஸ்ரீராம் என்னை தாக்கினார். ஸ்ரீராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்தும் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 புகார்கள் குறித்தும் தேனாம்பேட்டை போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.