உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறீர்கள். அந்த நினைவிடத்தில் உச்ச நீதிமன்றத்தின்  இத்தீர்ப்பின் வரிகளை எழுத முன்வருவீர்களா? என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி. ஆ.ராஜா எழுதியுள்ள கடிதத்தில்;- சசிகலாவோ, சுதாகரனோ, இளவரசியோ அரசியல் சட்டத்தின்பால் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள் அல்ல.  மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர்களும் அல்ல.  அரசியல் சட்டத்தின் முகப்புரை பண்புகளுக்கு பொறுப்பாளிகளும் அல்ல.  அவர்கள் அரசியல் சட்டத்தை படுகொலை செய்யுமிடத்திலும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.  எனவே, உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனக் கணைகள், ஜெயலலிதாவை மட்டுமே நோக்கித்தான் என்று பிறர் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை, உங்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. 

இவ்வளவு தெளிவாக ஜெயலலிதாவின் கொள்ளையை,  உச்ச நீதிமன்றம் தோலுரித்த பிறகும், ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதாக நீங்களோ  - உங்களின் பிரதிநிதிகளோ கூறுவீர்களேயானால், உங்களின் நேர்மையை சமூகம் சந்தேகித்தே தீரும்.   இவ்வளவு மோசமாக உச்ச நீதிமன்றத்தால் கொடூர தாக்குதலுக்கு உள்ளான ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை, எங்கு சென்றாலும் முன்னிறுத்தி, அவர் வழியில்தான் ஆட்சி நடைபெறும் என்று கூறுவது  எவ்வளவு அருவருப்பு கலந்த இழிவு என்பதை உங்களால் உணர முடிகிறதோ இல்லையோ, பொது வாழ்வில் குறைந்தபட்ச நேர்மையை எதிர்பார்க்கும் எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.  உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறீர்கள். அந்த நினைவிடத்தில் உச்ச நீதிமன்றத்தின்  இத்தீர்ப்பின் வரிகளை எழுத முன்வருவீர்களா?

பீகார் மாநிலத்தில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான தன் தந்தை லாலு பிரசாத் யாதவின் படத்தை போடாமலும் - அவர் பெயரை உச்சரிக்காமலும்தான் தேர்தல் களம் கண்டார் அவர் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ்.  தந்தையேயானாலும் தண்டிக்கபட்ட குற்றவாளி என்ற அவரது தயக்கத்தில்தான் உண்மையும் நியாயமும் அவரிடத்தில் நிலைகொண்டன.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ஆளாகி, உயர்நீதிமன்றத்தால் போதுமான ஆதாரம் உள்ளதென்றும்; நீங்கள் முதலமைச்சர் என்பதால் மத்திய புலனாய்வு அமைப்புதான்  வழக்கை விசாரிக்க வேண்டுமென்றும், உயர்நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு எதிராக வந்த பிறகும் உங்கள் தலைவியைப் போலவே சட்டத்தின் சந்து பொந்துகளில் ஒளிந்து கொண்டு வரும் உங்களுக்கு, ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் பெயரையும், படத்தையும் முன்னிலைப்படுத்துவதில் தயக்கம் இருக்காது என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார். 

என்றாலும் ஒரு  தாழ்மையான வேண்டுகோள்:   எது உண்மையென்று தெரிந்த பிறகாவது உண்மையை மறைப்பதையும்,   தகுதியற்ற சிலரை அனுப்பி பேட்டி என்ற பெயரால் பொய்களுக்கு மகுடம் சூட்டுவதையும் எதிர்காலத்திலாவது நிறுத்திக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.