நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக  எம்பிக்கள், நீட் தேர்வு விலக்கு குறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இதுதொடர்பாக சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, 2 முறை ஜனாதிபதிக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஜனாதிபதி அலுவலகத்துக்கு, தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்கான ஆவணம் சேரவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 2 நாட்க்ளுக்கு முன் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்தித்து, பேசினார். அப்போது, தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் நீட் தேர்வு விலக்கு குறித்து பரிசீலனை செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வு விலக்கு அளிக்க வலியுறுத்தி இன்று மாலை திமுக சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சேலத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே, திமுக எம்பிக்கள், நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கனிமொழி, டி.கே..எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா உள்பட தமிழக எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.