உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக மகளிரணி செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும் என கனிமொழி ஆவேசமாக கூறியுள்ளார்.

இந்தி மொழி எதிர்ப்பு

மத்திய அரசின் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ச்சியாக தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு துவக்கம் முதலே தமிழகத்தில் இருந்த எதிர்ப்பும் இன்னும் மாறவில்லை. சமீபத்தில் மும்மொழி கல்வி கொள்கையையும் திமுக, அதிமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

அமித் ஷா

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் பேசிய அவர், இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். பிற உள்ளூர் மொழிகளிலிருந்து வரும் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை மேலும் நெகிழ்வாக மாற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இந்தி மொழி பேச வேண்டும்

வெவ்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் ஆங்கிலத்தில் அல்லாமல் இந்தியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா "அரசாங்கத்தை நடத்துவதற்கான அலுவல் மொழி இந்தி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார், இது நிச்சயமாக இந்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியாக இந்தியை ஆக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிற மொழிகளைப் பேசும் மாநிலங்களின் குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்திய மொழியில் இருக்க வேண்டும் என்றார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

கனிமொழி கண்டனம்

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக மகளிரணி செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.