தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினரை போலவே சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் முதல்வர் என அரசு எந்திரமே மும்முரமாக செயல்பட்டுவருகிறது. 

கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை பணிகளும் தடுப்பு பணிகளும் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. அதனால் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர்.

மக்கள் நலனை கருத்தில்கொண்டு ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்காமல், தங்களை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காக, எதிர்க்கட்சிகள் நோயிலும் அரசியல் செய்கின்றன. அதற்கெல்லாம் செவிமடுக்க முடியாது என்று முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துவருகிறார்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு சென்று, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன், தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி, சேலம் மாவட்ட நிர்வாகத்தின் பணிகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், ஊரடங்கை முதல்வர் பழனிசாமி மீறியதாகவும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேலம் காவல்துறை ஆணையரிடம் சேலம் திமுக எம்பி ஆர்.எஸ்.பார்த்திபனும் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரனும் இணைந்து புகாரளித்துள்ளனர். 

கொரோனாவை தடுக்கும் நோக்கில், ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கை மீறி, முதல்வர் பழனிசாமி சென்னையிலிருந்து சேலத்திற்கு வந்ததுடன், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28 அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தியிருக்கிறார். பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தை மீறி செயல்பட்ட முதல்வர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் மீது இதுபோன்று புகாரளிப்பது, அபத்தமென்று தெரிந்து செய்கிறார்களா அல்லது தெரியாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை. திமுக மக்கள் பிரதிநிதிகளின் இதுபோன்ற செயல்கள், எதிர்க்கட்சிகள் தங்களை முன்னிலைப்படுத்தி கொள்ள முனைகின்றன என்ற முதல்வரின் குற்றச்சாட்டை நியாயப்படுத்துகின்றன.