சசிகலாவும் - பன்னீர்செல்வமும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னை நோக்கி மீடியாக் கண்களைத் திருப்புவதற்காகப் பழனிசாமி செய்து வரும் தந்திரம்தான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் எல்லைகளைத் தாண்டி அவர் பேசி வருவது ஆகும். 

சசிகலாவின் நடவடிக்கைகள் - பன்னீர்செல்வத்தின் ஒத்துழையாமை - கொடநாடு வழக்கு - லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள புகார்கள் -உயர்நீதிமன்றத்தின் உத்தரவு - உச்சநீதிமன்றத்தில் உள்ள மேல் முறையீடு - பினாமிகளின் பரிதவிப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து பழனிசாமியை உளற வைக்கிறது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக கட்சி பத்திரிகையான ‘முரசொலி’யில் காட்டமாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அநாகரிகமாக விமர்சிப்பதாக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மீது விமர்சனங்களை முன் வைத்து திமுக அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ தலையங்கத்தில் இன்று எழுதப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

பழனிசாமி தந்திரம்

பழனிசாமி தரங்கெட்ட தற்குறி என்பதை இந்த நாடு அறியும். சசிகலாவின் காலை நோக்கி தரையில் உருண்டு போயாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக சில ஆண்டுகள் இருந்து தொலைத்துவிட்டார் என்பதற்காக கொஞ்சமாவது வேட்டியில் மரியாதை ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அந்த மரியாதையையும் சமீபகாலமாகத் துடைத்தெறிந்து கொண்டு இருக்கிறார் பழனிசாமி. தகுதியற்றவரை ஒரு பதவியில் உட்கார வைத்தால், அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்வார் என்பதன் அடையாளம்தான், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் - நானும் ஒரு தலைவன்தான் என்பதைக் காட்டிக் கொள்ளவும் அவர் நித்தமும் உளறிக் கொண்டு இருக்கிறார்.

சசிகலாவும் - பன்னீர்செல்வமும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னை நோக்கி மீடியாக் கண்களைத் திருப்புவதற்காகப் பழனிசாமி செய்து வரும் தந்திரம்தான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் எல்லைகளைத் தாண்டி அவர் பேசி வருவது ஆகும். ஒருமையில் பேசுவது, கொச்சைப்படுத்துவது, அவதூறு செய்வது, ஒரு நாட்டின் முதலமைச்சரை எப்படி விளித்துப் பேசுவது என்ற எந்த இலக்கணமும் அந்த தற்குறிக்குத் தெரியவில்லை. திண்ணையில் படுத்துருளும் சண்டியர்கள், ஏப்பம் விடுவதைப் போல கெட்ட நாற்றம் அடிக்கிறது பழனிசாமி பேச ஆரம்பித்தால். வாட்ஸ்அப் வதந்திகளை வைத்து ‘துபாய்’ பயணம் குறித்த அறிக்கையை வெளியிட்டதைப் போல மிகமோசமான அறிக்கை இருக்க முடியாது. 

கடைந்தெடுத்த கற்பனை

அந்த அறிக்கைக்கு திமுக சார்பில் அதிகாரப்பூர்வமான பதில் அறிக்கை வெளியிடப்படவில்லை. அது தேவையும் இல்லை. ஏனென்றால், அவை அனைத்தும் கொச்சையான,கோமாளித்தனமான வியாக்கியானங்கள். துபாய் போனாராம் முதலமைச்சர். திரும்பி வந்ததும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள டெல்லி வந்து பிரதமரைச் சந்திக்க வந்து விட்டாராம், காலில் விழ வந்துவிட்டாராம் - இதுதான் பழனிசாமியின் கடைந்தெடுத்த கற்பனை. அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் யாரும் இதில் எந்தச் சொல்லையும் ஏற்க மாட்டார்கள். பிரதமரைச் சந்தித்த அன்றே பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்கள். பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு காங்கிரஸும், இடதுசாரிகளும், பா.ஜ.க.வை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்தியக் கட்சிகள் - மாநிலக் கட்சிகளுக்கு விடுத்த வேண்டுகோளாகும்.

பாஜகவின் காலில் விழுந்துவிட்டோ - விழத் தயாரான ஒருவரோ இப்படிச் சொல்வாரா? இப்படி அவர் சொன்னதாவது பழனிசாமிக்கு தெரியுமா? தெரியாது. அந்த அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளும் தன்மை அவருக்கு இருந்தால் இப்படி உளறி வைப்பாரா? ‘நீங்கள் சசிகலா காலை நோக்கி ஊர்ந்து போனீர்களா?’ என்று கேட்டபோது, ‘நான் என்ன பாம்பா? பல்லியா?’ என்று கேட்டாரே தவிர, ஊர்ந்து போகவில்லை என்று சொல்லவில்லை! தனக்குப் பதவி கொடுத்த சசிகலாவைப் பார்த்தே, ‘நீ எனக்கு சீட்டு வாங்கிக் கொடுத்தாயா? உனக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்? நீ ஏன் உரிமை கொண்டாடுகிறாய்?’ என்று கேட்டதன் மூலமாக கொஞ்சம்கூட மனச்சாட்சி இல்லாதவர் என்று நிரூபித்தவர் பழனிசாமி. 

சசிகலா காலை வாரினார்

1990 ஆம் ஆண்டு சேலம் மாவட்டச் செயலாளர் ஆன பழனிசாமியின் பதவியை சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதா பறித்தார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி பழனிச்சாமிக்கு தரப்பட்டது. சில ஆண்டுகளில் அதுவும் பறிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆனார் பழனிசாமி. சில ஆண்டுகளில் அந்தப் பதவியும் ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டது. 2008 இல் மீண்டும் பதவி தரப்பட்டது. அது மீண்டும் பறிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தோடு மொத்தமாக நெருக்கமானதால்தான் அ.தி.மு.க.வின் ஐவர் அணியில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதனால்தான் பன்னீர்செல்வத்தைவிட இவர் நம்பிக்கையானவராக இருப்பார் என்று சசிகலா குடும்பம் நம்பி முதலமைச்சர் பதவியைக் கொடுத்தது. அதன்பிறகு சசிகலாவையே காலை வாரினார். இத்தகைய களங்க அரசியல் வரலாறுதான் பழனிசாமியுடையது.

சசிகலாவின் நடவடிக்கைகள் - பன்னீர்செல்வத்தின் ஒத்துழையாமை - கொடநாடு வழக்கு - லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள புகார்கள் -உயர்நீதிமன்றத்தின் உத்தரவு - உச்சநீதிமன்றத்தில் உள்ள மேல் முறையீடு - பினாமிகளின் பரிதவிப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து பழனிசாமியை உளற வைக்கிறது. ‘புலிக்கு பயந்தவங்க என் மேல படுத்துக் கோங்க’ என்பது மாதிரி தன்னைக் காப்பாற்ற நாவடக்கம் இல்லாமல் பேசி வருவதை அவர் அடக்கிக் கொள்ள வேண்டும்.” என்று முரசொலியில் எழுதப்பட்டுள்ளது.