கண்ணால் பேசி காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் திமுக எம்.எல்.ஏ.,க்கள். ஆளுங்கட்சியினருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என தி.மு.க.,வினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு போட்டிருந்தார். அதை யாரும் கண்டுகொண்டது போல் தெரியவில்லை. சட்டசபையில், பட்ஜெட் தாக்கல் செய்து முடிந்ததும், அதன் மீது நான்கு நாட்கள் விவாதம் நடைபெற்றது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, சொல்லி வைத்தாற்போல முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் 'டாண் டாண்' என பதில் தந்தனர். 

அ.தி.மு.க., அமைச்சர்கள் தயவில் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், அரசு கான்ட்ராக்ட், பார்கள், ரியல் எஸ்டேட் என பல தொழில்களில் இறங்கி, நன்றாக சம்பாதித்து வருகிறார்கள். சட்டசபை நடந்தபோது மதியம், 1:00 மணிக்கெல்லாம் ஸ்டாலின், மதிய உணவுக்காக வீட்டுக்கு கிளம்பிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  அவர் கிளம்பிய பிறகு தி.மு.க.,வினர், ஆளுங்கட்சி தரப்பினரோடு கண்ணாலயே பேசிக் கொள்கிறார்களாம். இதை, பார்வையாளர் மாடத்தில் இருந்த தி.மு.க., ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரின் உளவாளிகள் கவனித்து, ஸ்டாலினுக்கு தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களை வைத்துக் கொண்டு, எப்படி சட்டசபை தேர்தலை சந்திப்பது என மு.க.ஸ்டாலினுக்கு கவலை வந்துவிட்டது. இதனால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் மு.க.ஸ்டாலின்.