அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், அயோத்தியில் தொடங்கிய ராமராஜ்ஜிய ரத யாத்திரை, வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. அந்த ரத யாத்திரை தமிழகத்திற்குள் வருவதற்கு, திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எஸ்டிபிஐ, தமமுக ஆகிய முஸ்லீம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் எதிர்ப்புகளை மீறி இன்று காலை நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் பகுதிக்குள் ரத யாத்திரை வந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார்  கைது செய்துள்ளனர். இதையடுத்து ரதயாத்திரை தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ரத யாத்திரைக்கு தடை விதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது, தமிழகத்தில் ராமராஜ்ஜிய ரத யாத்திரையால் ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக காவல்துறை டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க வேண்டும். தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்துதான் ரத யாத்திரை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அங்கெல்லாம் பிரச்னை ஏற்படவில்லை. தமிழகத்தில் எல்லா  மதத்தினருக்கும் எல்லா உரிமையும் உண்டு. எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்க 129 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை திமுக அரசியல் ஆக்குகிறது என பதிலளித்தார்.

முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றுகூறி சபாநாயகரை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அமைதி காக்குமாறு சபாநாயகர் தனபால் வேண்டுகோள் விடுத்தும், தொடர்ச்சியாக திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.