எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக எம்எல்ஏக்கள்  நாளை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கின்றனர்.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி.தினகரன்ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாகவும் கூறி ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தலைவர் கே. ஆர்.ராமசாமி ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதையே வலியுறுத்தியிருந்தார். ஆனால் இந்த கடிதங்கள் மீது ஆளுநர் தனது முடிவை தெரிவிக்கவில்லை. இது  தொடர்பாக ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தங்கள் வரத் தொடங்கின.

இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார். திமுக முதன்மை செயலாளர் துரை முருகன் தலைமையில் , அவரை சந்திக்க தி.மு.க. நேரம் கேட்டுள்ளது.

இந்நிலையில் நாளை  காலை 10.30 மணிக்கு சந்திக்க தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு கவர்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து , துரைமுருகன், தலைமையில்,கனிமொழி எம்.பி., ஜே. அன்பழகன், ஆர்.எஸ். பாரதி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் சந்திக்கின்றனர்.