முதலமைச்சரிடம் கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்லணும்; நிதியமைச்சரிடம் கேட்கும் கேள்விக்கு நிதியமைச்சர் பதில் சொல்லணும். வேற துறையில் இருக்கும் ஜெயக்குமார், முந்திரிக்கொட்டை மாதிரி பதில் சொல்கிறார் என்று நடிகரும், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு சாதனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா, சென்னை கலைவாணர் அரங்கில் பேரவை தலைவர் தனபால் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. அப்போது சிறப்பு மலர் ஒன்றும், சாதனை விளக்கப் படங்கள், புகைப்படங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஓராண்டு சாதனை குறித்து, நடிகரும், வேளச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர், எப்பவோ கவிழ வேண்டிய ஆட்சியை இத்தனை நாள் இழுத்ததுதான் அவர்களின் சாதனையாக உள்ளது என்றார். இது குறித்து பிரபல வார இதழ் ஒன்றின் வெப்சைட்டுக்கு அவர் பேட்டி அளித்திருந்தார்.

வாகை சந்திரசேகர் அந்த பேட்டியில், ஓராண்டாக அவர்கள் மக்களை பார்க்கவே இல்லை. தங்களது எம்எல்ஏக்களை தக்க வைப்பதற்கும், அவர்கள் வெளியேறாமல் தடுப்பதிலேயும், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டால் அதனை எப்படி சமாளிப்பது போன்றவற்றிலேதான் அவர்கள் கவனம் செலுத்தி
வருகிறார்கள். ஒரு சாதனையும் அவர்கள் செய்யவில்லை. எப்பவோ கவிழ வேண்டிய ஆட்சியை இத்தனை நாள் இழுத்ததுதான் அவர்களின் சாதனையாக உள்ளது என்றார்.
 
பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த வாகை சந்திரசேகரிடம், அமைச்சர் ஜெயக்குமார் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்திரசேகர், ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் மாதிரி ஆகிவிட்டார். திமுக இருந்தபோது ஏன் செய்யவில்லை. இப்ப செய்ய சொல்கிறீர்கள் என விதண்டாவாதமாக பேசி வருகிறார்.
காவிரி விவகாரத்தில் சரியான பதிலை கொடுக்கவில்லை. 

முதலமைச்சரிடம் கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்லணும். நிதி அமைச்சரிடம் கேட்கும் கேள்விக்கு நிதியமைச்சர் பதில் சொல்லணும். வேற துறையில் இருக்கும் ஜெயக்குமார், முந்திரிக்கொட்டை மாதிரி பதில் சொல்கிறார். எங்களை பிரிக்க முடியாது என்று ஜெயக்குமார் பேசுகிறார். அப்படியானால் ஏதோ ஒன்று இருக்கு. அவர்களுக்குள்ளேயே ஒற்றமையில்லை. எப்ப வேண்டுமானாலும் பிரிவார்கள். ஒற்றுமையாக இருப்பதுபோல் விளம்பரம் செய்கிறார்கள். இந்த ஆட்சியை கலைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று ஸ்டாலிள் தெளிவாக பலமுறை கூறிவிட்டார்.

தினகரன் சசிகலா தேவையில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தினகரன் மேடையிலேயே இரண்டு எம்எல்ஏக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களை உங்களால் என்ன செய்ய முடிந்தது என்று கேள்வி எழுப்பினார். இனி தேர்தல் நடந்தால் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதையும், அதிமுக வெற்றி பெறாது என்பதையும் அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். மக்களை சந்திக்க முடியாது என்பதால் இருக்கும் வரை சுருட்ட நினைக்கிறார்கள் என்று வாகை சந்திரசேகர் கூறினார்.