திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ., இதயவர்மன் வீட்டின் அருகில் இருந்து 3வதாக ஒரு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் செய்யும் இயந்திரம் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர் கிராமத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் வீட்டின் பின்புறம் தாண்டவமூர்த்தி, குமார் சகோதரர்களுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. தங்களது நிலத்தை விற்க வசதியாக அங்கு உள்ள அரசு நிலத்தைச் சாலை அமைக்க  தாண்டவமூர்த்தி, குமார் ஆகியோர் ஆட்களுடன் வந்தாகவும், அப்போது தகவல் அறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதனைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இந்த மோதலில்  தாண்டவமூர்த்தி, குமார் தரப்பினர் அரிவாளால் எதிர்த்தரப்பினரை வெட்டியதாகவும், இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும் கூறப்படுகிறது. லட்சுமிபதி தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் பதிலுக்குத் தாண்டவமூர்த்தி, குமார் தரப்பில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அந்த வழியே சென்ற சீனிவாசன் என்பவர் மீது குண்டு பாய்ந்து காயமடைந்தார். 

 இந்தச் சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டின் அடுகே உள்ள குடோனில் இருந்து துப்பாக்கி, 3 கிலோ அளவிற்கான ஈய குண்டுகள், ஒருகிலோ அளவிலான ஏர்பிஸ்டல், 50 பயன்படுத்தப்பட்ட குப்பிகள், 6 ரைபில்கள், ஒரு குழல் துப்பாக்கி மற்றும் குப்பிக்குண்டுகள் தயாடிக்கும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதான திமுக எம்எல்ஏ இதயவர்மன்  ஜாமீன் மனு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  எம்எல்ஏவின் எதிர்தரப்பை சேர்ந்த இமயம் குமார் கூட்டாளி தங்கராஜ் என்பவரின் ஜாமீன் மனு நாளை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எனவே ஒரே வழக்கில் தொடர்புடைய இரண்டு ஜாமீன் வழக்கை விசாரிக்க வேண்டியிருப்பதால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமீன் மனு விசாரணையை நாளை ஒத்திவைத்து மாவட்ட அமர்வு நீதிபதி வசந்தலீலா உத்தரவிட்டார்.