திமுக சார்பில்‘எல்லோரும் நம்முடன்’ என்ற பெயரில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில், மொபைல் எண் கொடுத்து ஓடிபி மூலம் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக்க முடியும். முதல் 3 நாட்களிலேயே ஒரு லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்ததாக திமுக பெருமையாக அறிவித்தது. திமுகவில் உறுப்பினர் ஆவது எளிமைப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அது சர்ச்சையாக மாறியுள்ளது. 
முதல் நாளிலெயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திமுகவில் சேர்ந்ததாக அவருடைய உறுப்பினர் அட்டை வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. வெறும் மொபைல் எண் மூலம் எந்தவித ஆவணமும் இன்றி உறுப்பினர் அட்டை வழங்குவது தவறு என்பதை இது உணர்த்தியது. இதற்கிடையே திமுகவில் நீக்கப்பட்டவரான மு.க. அழகிரிக்கும் திமுகவில் சேர்ந்ததாக உறுப்பினர் அட்டைப் பெற்ற தகவலும் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவில் இணைந்ததாக அவருக்கு உறுப்பினர் அட்டை வெளியான தகவல் உறுப்பினர் சேர்க்கையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திமுகவின் இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மூலம் உயிரோடு இல்லாதவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தோர் திமுகவில் உறுப்பினர் அட்டையைப் பெற முடியும் என்ற குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குளறுபடிகளாஅல் சமூக ஊடகங்களில் திமுகவை எதிர்க்கட்சியின் எள்ளி நகையாடுகிறார்கள்.