Asianet News Tamil

மக்களின் மனதை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும்- ஸ்டாலின்.

தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை –2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூறியதைப் போலவே தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும்;

DMK Manifesto to capture the minds of the people.  also be a hero in the 2021 assembly elections. Stalin Says.
Author
Chennai, First Published Mar 3, 2021, 12:42 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் கட்சித் தொண்டருகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதன் விவரம்: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

மக்களின் குறைகளை தீர்க்கவும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகைகளிலும் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்களாட்சி எனப்படும் ஜனநாயகத்தின் மாண்பினை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை –2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூறியதைப் போலவே தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கதாநாயகனாக விளங்கும்; தமிழக மக்களின் மனங்களைக் கவரும். கழகத்தின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மார்ச் 11-ம் தேதி வெளியிடவிருக்கிறேன். 

அதற்கு முன்பாக, களத்தில் நிற்கும் ஆர்வத்துடன் கழகத்தினர் ஆயிரக்கணக்கில் விருப்பமனு தந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் சந்திக்கும் வகையில் மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. தோழமைக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை அதற்கென அமைக்கப்பட்ட குழு சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொண்டு வருகிறது.தேர்தல் களத்தில் இவை இரண்டும் பெரும்பணி மட்டுமல்ல, தி.மு.கழகத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு நாம் நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்புமாகும். அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிட, தேர்தல் களத்தில் இமைப்பொழுதும் சோர்ந்திடாமல் பணியாற்ற வேண்டிய கடமை உடன்பிறப்புகளாகிய உங்களுக்கும் இருக்கிறது. உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது. சோர்வின்றி உழைத்திடுவதற்கான அருமருந்தாகத்தான் என் பிறந்தநாளில் உங்களிடமிருந்து அன்பு தவழக் கிடைத்த வாழ்த்துகளைக் கருதுகிறேன். 

அறிவாலயத்திலும் இல்லத்திலும் நேரில் வந்து வாழ்த்திய கழக உடன்பிறப்புகள், கழக நிர்வாகிகள், தோழமைக் கட்சித் தலைவர்கள், அலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்த இந்திய ஒன்றியத்தின் மதிப்பிற்குரிய அரசியல் தலைவர்கள், கலையுலகத்தினர், பல்வேறு துறையினர், சமூக வலைதளங்களை வாழ்த்துகளால் நிரப்பிய கழக ஆதரவாளர்கள் - பொதுமக்கள் என எல்லோருடைய உளப்பூர்வமான வாழ்த்துகளால் கூடுதல் உற்சாகத்துடன் உழைப்பினைத் தொடர்கிறேன். அத்தகைய வாழ்த்துகளை வழங்கிய அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே, உங்கள் வாழ்த்துப் பூக்களை தேர்தல் களத்தில் வெற்றிமாலையாகத் தொடுத்து, தலைவர்  கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்குவதற்காக உங்களில் ஒருவனான நான் காத்திருக்கிறேன்.களைப்பின்றிக் கடமையாற்றுகிறேன்.

மார்ச் 1 எனக்குப் பிறந்தநாள் என்றாலும், தமிழகத்தின் விடியலுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் அடங்கிய கழகத்தின் இலட்சியப் பிரகடனத்தை வெளியிடும் மார்ச் 7 நமக்கான சிறந்த நாள். ஏப்ரல் 6-ல் மக்கள் எழுதப்போகும் வெற்றித் தீர்ப்பையும், மே 2 அன்று கழகம் அதனை அதிகாரபூர்வமாகப் பெறப் போவதையும் கட்டியம் கூறும் நாள். தி.மு.கழக வரலாற்றில் திருப்புமுனைகள் பலவற்றைத் தந்த தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 7 அன்று திரண்டிடுவோம். தமிழகத்தைப் பத்தாண்டுகளாகப் பிடித்து ஆட்டுகின்ற அ.தி.மு.க எனும் காரிருளை விரட்டி, உதயசூரியக் கதிரொளி பரப்பிடும் பிரகடனத்தை வெளியிடுவோம். தமிழக மக்களின் கைகளில் அதனை ஒப்படைத்து, வெற்றியினை உறுதிப்படுத்திடச் சூளுரைப்போம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios