dmk left from TNassembly due to beef issue

சட்டமன்றத்தில் இன்று மத்திய அரசின் மாட்டு இறைச்சி விவகாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியறுத்தினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மழுப்பலான பதில் அளித்ததால், எதிர்க்கட்சியினர் வெளியேறினர்.

மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அமைப்பினர் மாட்டு இறைச்சி விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையொட்டி புதுச்சேரி, கேரளா, மேகாலயா உள்பட சில மாநிலங்களில் மத்திய அரசின் மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில் தமிழக சட்மன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாத கூட்டம் கடந்த வாரம் தொடங்கியது. அப்போது, மாட்டு இறைச்சி விவகாரத்தில், திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் மானிய கோர்ரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது நேரமில்லா நேரத்தின்போது, மாட்டு இறைச்சி விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதில் பல்வேறு மாநிலங்களில் மாட்டு இறைச்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசும் அதேபோல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் பசுவதை சட்டம் கடந்த 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருந்தால், அதுபற்றி பரிசீலனை செய்யப்படும். மக்களின் கோரிக்கையை ஏற்று அதுபற்றி பரிசீலனை செய்யப்படும் என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பதில், திருப்தி அளிக்காததால் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினர்.