நாமக்கல் மாவட்டத்தில் ரூ.336 கோடி செலவில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் கட்டுமான பணியை முடித்து விட வேண்டும் என பணிகள் தீவிரமாக கட்டப்பட்டு வருகின்றது.மருத்துவ கல்லூரியின் முகப்பு மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டட தொழிலார்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், ஆளுங்கட்சியின் அலட்சியமும், ஊழலுமே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி..., “நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகேபி சின்ராசு நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டடம் இரவே இடிந்து விழுந்து விட்டதாகவும் ஆம்புலன்சில் வந்து விபத்தில் சிக்கிய மருத்துவமனை ஊழியர்களை எடுத்துச் சென்றதாகவும் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் இதை நிரூபிக்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது ஆட்சிக்காலத்தில் கோவை அம்மன் குளத்தில் 45 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. அதனை மறந்துவிட்டு பேசுகிறார். அவரது ஆட்சிக்காலத்தில் தர்மபுரியிலும் மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனை வைத்து நாங்கள் அவர்களைப் போல அரசியல் செய்ய விரும்பவில்லை.

எதிர்க்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் ஒரு அறிக்கை விட்டு இருக்கிறார். அதாவது விவசாயத்திற்கு மும்முனை இணைப்பு கொடுப்பதை நேரம் மாற்றி இருப்பதை இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு ஒரு முன்னோட்டமா.? என்று கூறியுள்ளார். அவர்கள் மின்சாரத்தை பற்றி பேச தகுதி அற்றவர்கள் அவர்களுடைய ஆட்சி காலத்தில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது என்பதை நினைவுப்படுத்துகிறேன்” எனக் கூறினார்.


சென்னை மவுலிவாக்கம் பிரச்சனைக்கு பிறகு கட்டுமானத்தில் பல்வேறு விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகள் எங்காவது தரமாக கட்டப்பட்டிருக்கிறதா? அந்த துறையில் நடக்கும் கட்டுமானங்கள் எப்படி இருக்கிறது என்பது எதிர்கட்சித் தலைவருக்கு தெரிந்தும் தெரியாதது போல் ஏன் இருக்கிறார். அதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்திருக்கும் ஊழல்கள் இவர் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை. கொரோனா காலத்திலும் பல நூறு கோடிக்கு டெண்டர் விட்டு அவசரஅவசரமாக வேலைகள் நடத்தி வருகிறார்கள் இதுயெல்லாம் ஏன் ஸ்டாலினுக்கு தெரியவில்லையா? அதிமுக ஆட்சியில் கடந்த 5 வருடத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டிய கட்டங்கள் அனைத்தையும் தொழில்நுட்ப குழு ஆய்வு செய்யவேண்டும் என்று ஏன் நீதிமன்றத்துக்கோ, அறிக்கையோ கொடுக்காமல் இருக்கிறார்  என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.