பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக இந்த முறை ஆட்சியை பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் உள்ள அதிமுக மீதான அதிருப்தியே தங்களை வெற்றி பெற வைத்துவிடும் என்று திமுக நம்புகிறது. அதோடு நாடாளுமன்ற தேர்தலில் தேனியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி லட்சக்கணக்கான வாக்குகுள் வித்தியாசத்தில் வென்றது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2001ம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் வெல்லும் கட்சியை ஆட்சியை பிடித்து வருகிறது. இந்த நம்பிக்கையும் திமுகவிற்கு புதிய தெம்பை கொடுத்திருந்தது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் போட்டியிட்ட தொகுதிகளை விட திமுக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகளில் பல லட்சம் வாக்குகுள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. எனவே மக்கள் திமுகவையே விரும்புகிறார்கள் என்று அந்த கட்சி தலைமை நம்ப ஆரம்பித்தது. அத்தோடு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக போன்ற கட்சிகளுக்கு வாக்கு வங்கியும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மேலும் இந்த கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் எளிதாக வென்றுவிடுகிறார்கள்.

எனவே சட்டப்பேரவை தேர்தலில் இதனை கருத்தில் கொண்டு தொகுதிப் பங்கீட்டை திமுக மேற்கொண்டு வருகிறது. காங்கிரசுக்கு 16 முதல் 21, இடதுசாரிகளுக்கு தலா 6 தொகுதிகள், மதிமுகவுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதி, விசிகவுக்கு 5 தொகுதிகள் என்று திமுக ஒரு கணக்கு போட்டு வைத்துள்ளது. ஆனால் இதனை கூட்டணி கட்சிகள் எதுவும் ஏற்கவில்லை. காங்கிரஸ் 40 தொகுதிகள் என்பதில் இருந்து இறங்கி வர மறுக்கிறது. இடதுசாரிகள் தலா ஒரு டஜன் தொகுதிப்பட்டியலுடன் காத்திருக்கின்றனர். விசிக உதயசூரியன் சின்னம் என்றாலும் ஓ.கே ஆனால் 12 தொகுதிகள் வேண்டும் என்கிறது.

வைகோவோ இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை திமுக இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றே கூறி வந்தது. ஆனால் இது கூட்டணி கட்சிகளை எரிச்சல் அடைய வைத்துள்ளது. கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை திமுக தரவில்லை என்றால் கூட்டணி தேவையில்லை என்கிற ரீதியில் காங்கிரஸ் பேச ஆரம்பித்துள்ளது. தங்களுக்கு உரிய தொகுதிகளை தாங்கள் கேட்டுப் பெறுவது உறுதி என்று கே.எஸ்.அழகிரி பிடிவாதம் காட்டி வருகிறார்.

அத்தோடு வார்த்தைக்கு வார்த்தை கமலை கூட்டணிக்கு அழைக்கிறார் அழகிரி. மேலும் கமல் கட்சியால் பாதிக்கப்படப்போவது தங்கள் கூட்டணி வாக்கு வங்கி தான் என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். இவை அனைத்துமே 3வது அணிக்கான பிள்ளையார் சுழி என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. வெறும் 20 தொகுதிகளை பெற்றுக் கொண்டு காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்க தயாராக இல்லை என்கிறார்கள். மேலும் தமிழகத்தில் ராகுல் காந்திக்கு செல்வாக்கு உள்ளதாக வந்துள்ள கருத்துக் கணிப்பு காங்கிரசுக்கு குருட்டு தைரியத்தை கொடுத்துள்ளது.

கேரளாவில் ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தி அடிக்கடி பிரச்சாரத்திற்கு வர திட்டமிட்டுள்ளார். அப்போதெல்லாம் தமிழகத்திற்கு வரவழைத்து பிரச்சாரம் செய்ய வைக்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. எனவே கமல், விசிக போன்ற கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் 3வது அணி அமைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனை உணர்ந்தே திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டியது திமுகவின் கடமை என்று கூறியுள்ளார். மேலும் திமுகவிற்கு விரும்பும் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும் அந்த தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளரை கைவிட்டுவிடக்கூடாது என்று கண்டிப்புடன் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு தாராளமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய ஸ்டாலின் இறங்கி வந்துள்ளதாக சொல்கிறார்கள். ஒருவேளை தொகுதிப்பிரச்சனையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி 3வது அணி அமைத்தால் அது திமுக வாக்கு வங்கியை டேமேஜ் ஆக்கும் என்று ஸ்டாலின் நம்புகிறார். கடந்த முறை மக்கள் நலக்கூட்டணியால் தான் திமுக வேட்பாளர் பல்வேறு தொகுதிகளில் ஆயிரத்திற்குள் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தனர். அங்கெல்லாம் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடாமல் இருந்திருந்தால் திமுக ஆட்சியை பிடித்திருக்கும். எனவே அதே போன்றதொரு நிலைமை தற்போதும் ஏற்படுவதை தவிர்க்கவே காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிப் பங்கீட்டில் சிறிது தாராளம் காட்ட திமுக திட்டமிட்டுள்ளது. இதே பாணியில் விசிக, இடதுசாரிகள், வைகோவையும் திமுக திருப்தி படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.