அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. முகமது ஜான் திடீரென்று மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த சமயத்தில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான அதிமுக எம்.பி. முகம்மது ஜான் மாரடைப்பால் மரணடைந்த சம்பவம் அக்கட்சியினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராணிபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் பிரசாரம் மேற்கொண்டு வந்த முகமது ஜான், அதனை முடித்துக் கொண்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டார். வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. 

அதிமுகவில் ராணிப்பேட்டை நகராட்சிக்கு 1996-2001 வரையிலும், பின்னர் 2001-2006 வரையிலும் தேர்வு செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது ஜான். ஜெயலலிதா அமைச்சரவையில் சில மாதங்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ராணிபேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் முகமது ஜான் பணியாற்றி வந்தவர். 2019ஆம் ஆண்டு சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து ராஜ்யசபா எம்பி பதவிக்கு அதிமுக சார்பில் முகமது ஜானை தேர்வு செய்தனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகி மரணத்தை அடுத்து இபிஎஸ், ஓபிஎஸ் தங்களுடைய இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளனர். 

திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. முகமது ஜான் திடீரென்று மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஆழ்ந்த இரங்கல், மாநிலங்களவையில் தமிழகத்தின் குரலாய் ஒலித்தவர், அவரை இழந்து வாடும், குடும்பத்தினர், உறவினர்கள், அதிமுக-வினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம், ஆறுதல் என பதிவிட்டுள்ளார்.