ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனுக்கு 20 ரூபாய் டோக்கன் ஐடியா கொடுத்தது திமுகவில் இணைந்த  எம்.எல்.ஏ.செந்தில்பாலாஜி என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். 

அமமுக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு 5 சதவீத வாக்குகள் வாங்கிய நிலையில் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, போர்ப்படை தளபதி தங்கத்தமிழ்செல்வன் பெரும்படையுடன் திமுகவில் சேர்த்துவிட்டார். இசைக்கி சுப்பையா மாவட்டங்களை துடைத்துக்கொண்டு அதிமுகவில் இணைந்துவிட்டார். பிரச்சார பீரங்கி புகழேந்தி பெரும்படையை திரட்டிக்கொண்டுபோய் அதிமுக ஐக்கியமாகிக்கொண்டார். 

இது தினகரன் தரப்பிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 14 ஆண்டுகளாக முகவரி இன்றி இருந்தவர் டி.டி.வி. தினகரன். அவரை இந்த ஊருக்கு தெரியப்படுத்தியது நான் தான். ஜெயலலிதா மரணம் அடைந்த போது கூட, அவர் இல்லை என்றும் கூறினார். மேலும், அமமுக கட்சியை முடக்க வேண்டும் அவருக்கு பொதுசின்னம் வழங்கக்கூடாது என பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தார். 

இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில் எம்.ஜி.ஆர் 103-வது பிறந்த நாளையொட்டி, அதிமுக சார்பில், கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.செம்மலை மற்றும் தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய புகழேந்தி, தன்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய ஆர்.கே.நகர் மக்களுக்கு டி.டி.வி. தினகரன் இதுவரை என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி, ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு 20 ரூபாய் டோக்கன் யோசனையை டி.டி.வி. தினகரனுக்கு கூறியது, தற்போது திமுகவின் செந்தில் பாலாஜிதான் என தெரிவித்தார்.